திவ்ய பிரபந்தம்

Home

3.3.4 கடியார் பொழில் அணி வேங்கட

பெரியாழ்வார் திருமொழி 3.3.4

வாசனை நிறைந்த மலர்கள் கொண்ட, சோலைகளை உடைய அழகிய திருவேங்கடத்தில் வாழ்பவனே, கறுத்த நிறத்தை உடையவனே, யுத்தம் செய்ய இருக்கின்ற காளையைப்போல் செருக்குடன் நிமிர்ந்து இருப்பவனே, கன்றுகளிடத்தில் அதிக ஆசை உள்ளவனே, எனக்கு ஸ்வாமியானவனே, நீ உகக்கும் குடையும் செருப்பையும், புல்லாங்குழலையும் எடுத்து கொடுத்த போதும், (அவற்றை) கொள்ளாமல், கன்று மேய்க்க போனவனே, கடுமையும், வெப்பமும் நிறைந்த காடுகளில் கன்றுகளின் பின்னே சிறு பிள்ளையான உன்னுடைய செந்தாமரை பூ போன்ற திருவடிகளும் கொதித்து, உன்னுடைய கண்களும் சிவந்து, நீ இளைத்தாய்; நீ என் பிரான் அல்லவோ என்று மனம் தளர்ந்து சொல்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

எல்லா இடங்களிலும் திரியும் கன்றுகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே புல்லாங்குழல் ஊதி, அழைத்துக் கொண்டு இருக்கலாம், என்று கண்ணனுக்கு குழலை கொடுக்க, அதையும் அவன் எடுத்து செல்லவில்லை.

அவன் சென்ற இடமோ, மிகவும் கொடுமையான காடு. காலில் செருப்பில்லாமல், மென்மையும் குளிர்ச்சியையும் கொண்ட அவன் செங்கமல திருவடிகள் வெதும்பிப் போயின; மேலே குடை இல்லாததால், கண்கள் சிவந்தன; மேலும் குழல் இல்லாததால், அங்கும் இங்கும் தேடி திரிந்த கன்றுகளை பார்த்ததால் கண்கள் சிவந்தன; கன்றுகளின் வயிற்றுக்கு உணவு நிறைவு குறைவு பார்த்ததால் கண்கள் சிவந்தன; துஷ்ட மிருகங்கள் வருகின்றனவா என்று பார்த்ததால் கண்கள் சிவக்கின்றன என்கிறார். இப்படி கன்றுகளை ஒன்று சேர்த்ததால் உடம்பு இளைத்தது; இப்படியொரு கஷ்டம் வர வேண்டுமா என்று தாயான யசோதை கலங்குவதான பாடல். ஊருக்குள்ளே திரியும் போது,கரும் போரேறே என்று புஷ்டியான வடிவத்தை உடையவனான செருக்கித் திரிய வேண்டிய நீ, இப்படி இளைத்து விட்டாயே என்று பாடுகிறார்.

திருவாய்பாடியில் எல்லா இடங்களிலும் செருக்குடன், ‘பட்டி மேய்ந்ததோர் காரேறு‘ (நாச்சியார் திருமொழி 14.1) என்பது போல திரிவதை சொல்கிறார்.

Leave a comment