காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க் கோடல் பூச் * சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன் உடம்பு, * பேடை மயிற் சாயல் பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன், * ஆடி அமுது செய் அப்பனுமும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான்.
பெரியாழ்வார் திருமொழி 3.3.3
காடுகளின் உள்ளே போய், கன்றுகளை மேய்த்து, அவை கைகளைவிட்டு போகாதபடி, அவைகளை மறிக்கைக்காக முன்னே ஓடி, பெரிய காந்தள் பூக்களை திருமுடியில் சூட்டிக் கொண்டு வருகிற தாமோதரனே, உன்னுடைய திருமேனி முழுவதும் கன்றுகளால் கிளப்பப்பட்ட தூசி படிந்து கிடக்கிறது பார்; பெண்மயில் போன்ற சாயலை உடைய நப்பின்னை பிராட்டிக்கு மணாளனே, நீராடுவதற்கு வேண்டுவன எடுத்து வைத்தேன்; நீராடி அமுது செய்ய வேண்டும்; உன்னோடு கூட உண்ண வேண்டும் என்று உன தகப்பனாரும் இதுவரை உண்ணவில்லை; தாமதம் செய்யாமல் சடக் என்று வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணனே! நீ கன்று மேய்க்கக் காடுகளுக்கு இடையே புகுந்து மேய்க்கும் போது அவை அங்குமிங்கும் சிதறி ஓட, அப்படி அவற்றை ஓட விடாமல் அவற்றின் முன்னே ஓடித் திருப்பி இவ்வாறு கஷ்டங்கள் பட்டுக் கன்றுகளை மேய்த்துவிட்டு வரும்போது உன் உடம்பு முழுவதும் புழுதி படிந்து கிடக்கின்றது; இந்த தூசு போகும்படி உன்னை நீராட்டுவதற்காக எண்ணெய் புளிப்பழம் முதலியவைகளை சேர்த்து வைத்து இருக்கிறேன். நீ வந்த பிறகு உன்னுடன் உண்ண வேண்டும் என்று உன் தகப்பனாரும் இதுவரை உண்ணாமல் காத்திருக்கின்றார்; ஆகையால் சடக்கென நீராடி அமுது செய்யவா என்றழைக்கின்றாள்.
Leave a comment