கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம்பொழில் காவிரித் தென் அரங்கம், * மன்னிய சீர் மது சூதனா, கேசவா, பாவியேன் வாழ்வுகந்து, * உன்னை இளம் கன்று மேய்க்கச் சிறு காலே ஊட்டி ஒருப் படுத்தேன், * என்னின் மனம் வலியாள் ஒரு பெண்இல்லை என் குட்டனே முத்தம் தா.
பெரியாழ்வார் திருமொழி 3.3.2
சென்ற பாடல், யசோதை தான் பார்த்து அனுபவித்து, மற்றவர்களுக்கு காண்பிப்பது போல அமைந்தது. இந்த பாடல் யசோதை நேர்கொண்டு சென்று அணைத்து கொண்டு தன்னுடைய ஸ்னேகத்தால் அவன் முகத்தை பார்த்து சொல்வது போல அமைந்து உள்ளது.
அழிக்க முடியாததாக, இனிமையாக, பெரியதாக, மதில்களாலே சூழப்பட்டு, நித்ய வசந்தமான சோலைகளை உடைய, காவேரி நதியோடு கூடி, தென் திசைக்கு முக்கியமான திருவரங்கத்திலே பொருந்தி உறைகின்ற, கல்யாண குணம் உடையவனாய், மது என்ற அரக்கனை அழித்தவனான, அழகிய தலை முடியை உடையவனானனே, பாவியான நான் நம் குடிக்கு ஏற்ற கன்று மேய்க்கை முதலிய வாழ்வை விரும்பி, இந்த அலைச்சல்களுக்கு ஆள் அல்லாத, உன்னை (திரும்பி வரும் வரை தாரகமாக இருக்க வேண்டும் என்று ) விடியற்காலையில் உண்ண உணவு கொடுத்து, இளங்கன்றுகளை மேய்க்கைக்காக அவற்றின் பின்னே போக விட்டேன். (இப்படி செய்து பொறுத்து இருந்த) என்னைக் காட்டிலும் நெஞ்சு உரம் உடைய இன்னொரு பெண் இந்த உலகத்தில் இல்லை; என் பிள்ளாய் முத்தம் கொடு என்று அணைத்து உகந்து சொல்கிறார்.
யாவரும் வந்து உன் திருவடி வணங்க அரங்கநகர் துயின்ற ஸர்வேச்வரனான உன் அருமையை, பெருமையை, சௌகுமார்யத்தை அறியாத நான், உன்னை இடைப் பிள்ளையாகவே நினைத்து குல தொழில் என்று கன்று மேய்க்கைக்காகக் காலையிலே ஊட்டிக் காடேறப் போக விட்ட எனது நெஞ்சின் கடினத்தை என்னவென்று சொல்வேன்; இவ்வாறு கடினமான நெஞ்சை உடைய பெண்கள் யாரேனும் இருப்பார்களா, இவ்வுலகு எங்கும் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் என்கிறார்.
வேறு சிலர் இருந்தாலும், அவர்கள் நெஞ்சு அழிந்து விழ மாட்டார்களோ என்று வருந்துகிறார். இனி இதைப்பற்றிச் சிந்தித்துப் பயன் என்ன. எனக்கு உண்டான இந்த வருத்தங்கள் எல்லாம் தீர ஒருமுத்தம் கொடுத்தருள் என்று உகந்து சொல்லுகின்றாள். வாழ்வு உகந்து என்பதால், சொந்த நன்மைக்காக ஆசைபட்டேனே தவிர உன்னுடைய பெருமைகளை நினைத்து கேட்கவில்லை, என்ற பொருள் தோன்ற சொல்கிறார்.
Leave a comment