திவ்ய பிரபந்தம்

Home

3.3.1 சீலைக் குதம்பை ஒருகாது

சென்ற பதிகத்தில், ஆயர் குல வழக்கபடி கண்ணனை கன்றுகள் மேய்க்க அனுப்பிவிட்ட பிறகு, அவன் ஊரில் இருக்கும் போது செய்த விளையாட்டுகளையும் லீலைகளையும் சொல்லி, இப்படி அவனை திரியாமல் விட்டு, வெப்பமும் கடினமுமாக உள்ள காடுகளில் கன்றுகளை மேய்க்க விட்டோமே என்று தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தியதை பெரியாழ்வார் பாடல்களாக சொன்னார். இந்த பதிகத்தில் அவன் மேய்த்துவிட்டு திரும்பும்போது, அவனுடைய திருமேனியையும், அலங்காரத்தையும் வியந்து, அவன்மேல் மேலும் ஆசைகொண்டு, தன்னை போல பிள்ளையை பெற்றவர் யாராவது உண்டா என்று எல்லோருக்கும் சொல்லும் பாடல்களை, ‘கண்ணா, நாளை முதல் கன்றின் பின் போகேல், இங்கேயே இரு ‘ என்ற வண்ணம் அவன் செய்ய வேண்டியவைகளையும் தவிர்க்க வேண்டியவைகளையும் இந்த பதிகத்தில் கூறுகிறார்.

பெரியாழ்வார் திருமொழி 3.3.1

ஒரு காதிலே சீலைத் தக்கையையும் மற்றொரு காதில், செங்காந்தள் பூவையும், திருமேனிக்குத் தகுதியாகச் சாத்தின பரியட்டத்தையும் அழகியதாய் பெரியதாக இருந்துள்ள, (பரியட்டம் நழுவாமைக்குச் சாத்தின) கச்சையும் குளிர்ந்து இருக்கின்ற முத்தாலே தொடுக்கப்பட்ட பிறை போல் வளைந்து இருக்கிற மாலையும் உடையவனாக கொண்டு கன்றுகளின் பின்னே, வருகின்ற கடல் போன்ற திருநிறத்தை உடையவனுடைய வேஷத்தை வந்து பாருங்கள்; ஒன்றாலும் குறை இல்லாத பெண்களே, பூ மண்டலத்தில் பிள்ளையை பெற்றவர்களும் (நல்ல பிள்ளை பெற்றவள், என்று சொல்லத்தக்கவள்) நானே, மற்ற எவரும் இல்லை.

காலி என்பது கன்றுகளில் உள்ள ஒருபிரிவு ஆகும். கன்றுகளை வயிறு நிறைய மேயவிட்டு அவற்றை முன்னே நடக்கவிட்டு, தான் பின்னே வர, கடல் போன்ற நிறத்தை உடையவனுடைய அலங்காரத்தை காணுங்கள் என்று அழைக்கிறாள்; என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள் ” (பெரியாழ்வார் திருமொழி 2.2.6) என்று கொண்டாடும்படி என்னை தவிர வேறு யார் உளர் என்கிறாள்.

யசோதை கண்ணனை வேண்டி அழைத்து அவன் இரண்டு காதுகளிலும் இட்ட திகிரி துணியில் ஒன்றினை அவன் காட்டிலே களைந்து விட்டு செங்காந்தள் பூவை அணிந்து கொண்டு வந்தான். பெண்களே, என் கண்ணன் கன்று மேய்த்து மீண்டு வருகின்ற கோலத்தை வந்து காண்மின், பிள்ளை என்றால் இவன் ஒருத்தனே அன்றி மற்றவர் இல்லை, என்று புகழ்ந்து மகிழ்ந்து பாடுகின்றாள்.

Leave a comment