திவ்ய பிரபந்தம்

Home

3.2.9 குடையும் செருப்பும் கொடாதே

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான், * உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுடை, * கடிய வெங்கானிடைக் காலடி நோவக் கன்றின் பின், * கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.

பெரியாழ்வார் திருமொழி 3.2.9

(வெய்யிலுக்கு தடுப்பாக) குடையும், (நிலம் சூடுவதை தடுப்பதற்கு) செருப்பும் கொடுக்காமல், (எனக்கு பவ்யமாய் நான் கட்டிய கட்டுக்களை அவிழ்க்காமல் வைத்து இருந்து), வயிற்றில் கயிற்று தழும்பை உடைய கண்ணனை, தாயான நான் (சூரிய வெப்பத்தால்) பிளந்து கிடப்பனவான, கூரிய, காலில் உறுத்தும், கால் வைக்க முடியாதபடி இருக்கும் பெரிய கற்களை உடைய, அதிக சூடு உடைய காட்டில் அவனுடைய உள்ளங்கால்கள் நோகும்படி, (பசுமை கண்ட இடமெல்லாம் பரந்து திரியும்) கன்றுகளின் பின்னே கடின மனம் கொண்ட நான் (சுகுமாரனான என் பிள்ளையை) போகவிட்டேனே என் பாவமே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நாட்டில் உள்ள பெரிய கற்கள் கதிரவனுடைய வெப்பத்தினால் ஒன்று பலவாகப் பிளந்து கூர்மை மிக்கு உள்ள சிறு கற்களாக மாறி, உள்ளங் காலில் குத்தி உறுத்தி வருத்துமே, வெயிலுக்குத் தடையாகக் குடையையும், தரையின் சூட்டுக்கு தடையாக செருப்பையும் அவனுக்குத் தராமல் இப்படிபட்ட காட்டிற்கு கன்றின் பின் போக விட்ட நான் பாவியே என்று தவிக்கிறாள். இங்குக் ‘கொடாதே’’ என்பதற்கு அவன் இவற்றை ‘வேண்டாம் ’ வென்று மறுக்கச் செய்தேயும் நான் கட்டாயப்படுத்தி அவனுக்கு அவற்றைக் கொடுக்காமல் போனானே என்றும் கொள்ளலாம்.

Leave a comment