பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால், * என் இளங் கொங்கை அமுதம் ஊட்டி யெடுத்து யான் * பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின்பின் * என் இளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே.
பெரியாழ்வார் திருமொழி 3.2.8
பன்னிரண்டு மாதம், (பிள்ளைக்கு நலுக்கம் வராமல்), வயிற்றிலே வைத்து நோக்கின மிகப்பாங்காக நடத்தி வந்த ஸ்னேகத்தால் தாயான நான் என்னுடைய குழைந்து இருக்கிற முலையின் பாலை ஊட்டி வளர்த்து எனக்கு இளம்சிங்கம் போன்றவனை, சுகுமார, சுந்தரமான, திருவடிகள் நோகும்படியாக விடியல் காலத்திலே காட்டிலே கன்றுகளின் பின்னே போக்கினேன்; எல்லே பாவம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சக்ரவர்த்தி திருமகனைப் போலவே கண்ணனும் பன்னிரண்டு மாதம் கர்ப்ப வாஸம் இருந்தான். இவ்வாறு பிறந்த பிள்ளை இடத்தில் இதுவே காரணமாக மிகுந்த அன்பை வைத்து அதற்கு தக்கபடி தன் முலைப்பாலை ஊட்டி வளர்த்து வந்த, தான் இன்று காலையில் அவனை எழுப்பி கால்கள் நோக கன்று மேய்க்க காட்டிற்கு போக விட்டேனே என்று பரிதவிக்கிறாள்.
வயிற்றில் இருந்த காலம் நலுங்காமல் பாதுகாத்தவள், பிறந்து வளர்ந்த காலத்தே நலுங்காவிடாமல் பாதுகாக்க நினைக்கிறாள். இப்படி அவனுடைய பருவத்திற்கு ஈடாக அவனை வளர்த்ததைச் சொல்கிறாள். ‘ஒன்றும் நோவாமே தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ‘ (பெரியாழ்வார் திருமொழி 1.8.9) என்று வளர்த்த மிருதுவான திருவடிகளை முட்களின் மேல் நடக்க விட்டேனே என்கிறாள்.
கண்ணனை யசோதைப் பிராட்டி மெய் நொந்து பெற்றவள் இல்லை என்றாலும், “உன்னை என் மகனே என்பர் நின்றார்” என்று ஊரார் இவனை இவள் பெற்ற பிள்ளையாகவே, சொல்லி வருவதால், இவளும் அதை மனதில் கொண்டு தானே அவனை பன்னிரு மாதங்கள் வயிற்றில் கொண்டவளாக கூறுகிறார்.
Leave a comment