திவ்ய பிரபந்தம்

Home

3.2.7 வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து

வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட, * துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே, * கள்ளி யுணங்கு வெங்கானதரிடைக் கன்றின் பின், * புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.

பெரியாழ்வார் திருமொழி 3.2.7

இளங்கோடி போன்று துவளும் பெண்களானவர்கள் ஓடி வந்து பழி தூற்றும் படியாக, (நிலத்தில் மிதித்து நடவாதே, குழக்கன்றுகள் செருக்காலே துள்ளுமா போல்), துள்ளிக்கொண்டு விளையாடி, தோழர்களோடு, திரியாதபடி (மழை இல்லாக் காலத்திலும் பசுமை மாறாத), கள்ளியானது, பால் வற்றி உலரும்படியாய், வெப்பத்தையுடைய காட்டு வழியில் பெரிய திருவடிக்கு நாதனானவனை காட்டிற்கு போக சொனனேன், எல்லாம் என் பாவமே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கொடி போன்று ஒடிந்து விழுகிறதைப் போல் இருக்கின்ற இடையை உடைய பெண்கள் என்னிடம் வந்து இவன் செய்த தீம்புகளைச் சொல்லிப் பழி தூற்றியதை, இவன் ஏற்றமாகக்கொண்டு, கர்வம் கொண்டு, மகிழ்ச்சியின் மிகுதியால் தோழர்களுடன் கூடித் துள்ளி விளையாடுபவனை இப்படி செய்து, தன்னோராயிரம் தோழர்களுடன் திரியவிடாமல், முது வேனிற் காலத்திலும் கள்ளிச் செடியும் கூட வற்றி உலரும்படி வெப்பம் அதிகமாக இருக்கும் காட்டுவழியில் கன்றின் பின் சென்று, அவன் வருந்தும்படி அனுப்பிவிட்டேனே என்று கதறுகின்றாள்.

Leave a comment