என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனை, * கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய, * பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல் * இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே.
பெரியாழ்வார் திருமொழி 3.2.10
எப்போதும் தாயான எனக்கு பிரியமானவனாய், நான் அனுபவிக்கும்படி, நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனானை (விளைவை அறியாதே) கன்றுகளின் பின்னே போகவிட்டேன் என்று யசோதை பிராட்டி மனம் வருந்திச் சொன்ன சொற்களை பொன்னால் செய்யபட்ட ஒளியை விடுகின்ற மாடங்களை உடைய திருப் புதுவையில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) வசிப்பவர்களுக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளிச் செய்த, இனியவையாக இருந்துள்ள தமிழ் பாடல்களான இவற்றை ஓத வல்லவர்களுக்கு துக்கம் என்பது இல்லாமல் போகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தீம்புசெய்த காலத்திலும், மற்றும் அனைத்து காலங்களிலும் தனக்கு இனியவனும் , தன் மணிவண்ணனும் ஆன கண்ணனை காட்டிற்கு கன்றின் பின் போக வைத்த யசோதையின் பாடல்களை பொன்மயமான மாடங்கள் நிறைந்த ஸ்ரீவில்லி புத்தூரில் விட்டு சித்தன் சொல்லிய இந்த இனிய தமிழ் பாடல்களை பாட வல்லவர்களுக்கு துன்பம் ஏதுவும் இல்லை என்று பாடி இந்த பதிகத்தை முடிக்கிறார்.
Leave a comment