அவ்வவ் இடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய், * கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே, * எவ்வம் சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின், * தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.
பெரியாழ்வார் திருமொழி 3.2.5
தேவர்களுக்கு நிர்வாககனானவனை, மச்சு, மாளிகை நிலவறை முதலான அந்தந்த இடங்களுக்கு (மற்றவர்களுக்கு தெரியாதபடி) தனியாகச் சென்று புகுந்து, இடங்களிலே ஏகாந்தமாகச் சென்று புகுந்து அந்த இடைபெண்களுக்கு அந்தரங்கனாய், கோவைக் கனியோடு ஒத்த திருவதரத்தை அவர்களுக்கு ஜீவனமாகக் கொடுத்து கூழ்மைத்தனமடித்து திரியாதபடி பயங்கரமாக வில்லை கையில் உடைய வேடர் திரிகிற காட்டிலே கன்றின் பின் போக விட்டேனே, அது என் பாவமே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அந்த அந்த வீடுகளில் புகுந்து, அங்குள்ள ஆயர் குல பெண்களுக்கு அணுக தக்கவனாக, அவர்களிடம் பேசி, அவர்களுக்கு தன் அதரத்தை கொடுத்து விளையாடி, தீம்புகள் செய்ய விடாமல், தேவர்களுக்கு அதிபதியானவனை, காட்டில் கையில் வில் அம்புடன் அலையயும் வேடர்கள் பின்னே அனுப்பிய நான் பாவியே என்று சொல்லும் பாடல்.
கண்ணனது பிரிவைப் பொறுக்க மாட்டாமல் ‘அவன் என்னை இவ்வாறு பிரிந்து என்னை வருத்துவதை காட்டிலும், இங்கு தான் நினைத்தபடி தீம்புகள் செய்து திரிவானாகில் இத்தனை வருத்தம் எனக்கு வந்திருக்காதே என்று கருதுகிறாள்.
அணுக்கன் என்றால் அந்தரங்கமாக இருப்பவன் என்ற பொருள். அதாவது அவர்கள் புத்திக்கு ஏற்றபடி தன்னை மாதிரி வைத்து கொள்ளுதல்.
கூழைமை என்பது, ‘உன்னைத் தவிர வேறொருத்தியையும் அறிய மாட்டேன், உன்னைப் பிரிந்தால் பொறுக்க மாட்டேன்’ என்று சொல்வதை போல சொல்லி அந்தந்த பெண்களுக்கு மட்டுமே உரியவன் என்ற தோற்றம் உருவாக்குபவன்.
எவ்வம் என்றால் துன்பம், அதனை செய்யும் சிலை (’எவ்வுஞ்சிலை’ ) என்று கூறுவதாக கொள்ளலாம். சிலை என்றால் வில், துன்பம் தரும் அம்புடன் கூடிய வில்லினை ஏந்திய வேடர்கள் என்றும் கொள்ளலாம்.
Leave a comment