நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும், * பொன்மணி மேனி புழுதியாடித் திரியாமே, * கன்மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின்பின் * என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே.
பெரியாழ்வார் திருமொழி 3.2.3
எனக்கு அனுபவிக்கலாம்படியான நீல மணி போன்ற வடிவை உடையவனை நல்ல நவமணிகள் பதித்த மேகலையை உடையவராய் சௌந்தர்ய பூர்த்தியை உடைய பெண்களோடு அழகிய நீல ரத்னம் போன்ற திருமேனியானது பிரதிதினமும் புழுதியில் அளைந்து திரியாதபடி மலையானது (இவன் கன்றுகளை அழைக்கிற துவனியாலும் அவை கூப்பிடுகிற துவனியாலும்), எதிரொலி எழும்பும் படியான காட்டு வழியிலே கன்றுகளின் பின்னே அனுப்பினேன்; என்னே என் பாவம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மஞ்சனம் ஆட்டி மனைகள் தோறும் திரிய காண்பதிலும், இப்படி புழுதியுடன் ஆடி திரிய காண்பதிலும், இவளுக்கு மகிழ்ச்சி / உகப்பு.
என் கண்ணன் தான் உகந்த பெண்களோடு கூடி, திருமேனியில் புழுதி படியும்படி சாதாரணமாக விளையாடிக் கொண்டு இந்த ஆயர்பாடியில் திரிந்து கொண்டு இருந்ததைத் தவிர்த்துக் கொடிய காட்டு வழியிலே கன்றின் பின்னே போக விட்டேனே, நான் பாவியேன் என்று பரிதவிக்கின்றாள். கண்ணன் காட்டு வழியில் போகும் போது இவன் கன்றுகளை அழைக்கின்ற சப்தத்தினாலும், அதைக் கேட்டு அவை பதிலுக்கு சப்தம் போடுகின்றதும் அருகிலுள்ள மலைகளில் பயங்கரமான எதிரொலியும் மற்ற சப்தங்களும் கேட்குமே என்று வழியின் கொடுமையை நினைத்து நோவு படுகின்றாள்.
Leave a comment