பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில், * சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே, * கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின் பின், * எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
பெரியாழ்வார் திருமொழி 3.2.2
பற்றும்படியான மஞ்சளை திருமேனியில் பூசிக்கொண்டு திருஆய்ப்பாடியில் உள்ள பெண்களுடன் தன்னை சேர்க்காமல் விளையாடுகிறவர்களுடைய மணல்வீடுகளை திருவடிகளால் அழித்து, எல்லா இடங்களிலும் இப்படி தீம்புகள் செய்து, திரியாதபடி, கன்றுகளுடைய தூளிகளாலே (அடித்துப் பறிக்கும்) வேடர் திரிகிற காட்டிலே, (வேறு ஒன்றையும் பார்க்கவிடாமல்) கன்றுகளின் பின்னே, என்னுடைய கண்ணனை எதற்காக போகவிட்டேன் என் பாவமே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் மஞ்சள் அரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதை சோதிப்பதற்காக கண்ணனுடைய கரிய திருமேனியிலே ஒருத்தி இழுத்த இடத்தில் இன்னொருத்தி இடாமல்,இன்னொரு இடத்தில் இழுத்து, கண்ணன் திருமேனி முழுவதும் மஞ்சளாய் இருக்கும் விதமாக, பூசிப்பார்ப்பார்கள். ஆதலால் மஞ்சள் பற்றுமஞ்சள் எனப் பேர் பெற்றது. கன்றுகள் திரள் கிளப்பின தூள்கள் காடெங்கும் பறக்கும் ஆதலால் கண்ணனுடைய பொன் போல் திருமஞ்சனம் செய்த மேனி நிறம் மழுங்குமே என்று அதை செய்த தன் பாவத்தை எண்ணி யசோதை கலங்குகிறார்.
Leave a comment