திவ்ய பிரபந்தம்

Home

3.2.1 அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை

அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை, * மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே, * கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின்பின், * என் செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.

அம்மம் உண்ண துயில் எழாய் என்றும், மூலை உண்ண தருவன் என்றும் கண்ணனுக்கு கால காலத்தில் பால் உண்ண கொடுத்து, பின்னர் அவன் பலவித சேட்டைகள் செய்கிறான் என்று கேள்விபட்டு, இவன் உணவு உண்ண வேண்டும் என்று அழுத போதும், இவன் மீது புத்திர பக்திக்கு மேல் தேவதா பக்தி வளர்ந்து, இவனை அறிந்து கொண்டேன், இவனுக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்று பல சரித்திரங்களை சொல்லி அனுபவித்தவர், இந்த பதிகத்தில் முன்பு சொன்னவைகளை உடனே மறந்து, புத்திர பக்தி தலையெடுக்க, பிராமணர்களுக்கு எப்படி பருவம் வந்தவுடன் பிரம்மசரியம் அனுஷிடிக்க கற்று கொடுப்பதுபோல், இடையர்களுக்கு பசு மேய்ப்பது தர்மம் என்று அவனை பசு கன்றுகள் மேய்க்க அனுப்பிய யசோதை, சற்று நேரத்திற்குள் ஐயோ, அவனை இப்படி கன்றுகளின் பின்னே அனுப்பி விட்டேனே, அவனுடைய சௌகர்யங்களுக்கு ஒரு குறையும் வர கூடாதே, குடையும் செருப்பும் கொடுக்காமல், கல்லும், முள்ளும், வெயிலும் உள்ள இடத்திற்கு போக செய்து விட்டேனே என்றும் சொல்லியவற்றை தானும் சொல்லி ஆழ்வார் அனுபவிக்கிறார்.

பெரியாழ்வார் திருமொழி 3.2.1

(கண்டவர்கள் கண் குளிரும்படி), மை போன்ற திருமேனி நிறத்தை உடையவனாய், இடையர் கோலம் பூண்டவனாய், இந்த இடையர்களுக்கு தலைவனான கண்ணனை, நீராட்டி, பிறர் மனைகள் தோறும், (தன் மனையில் திரிவதை போல) திரிவதைக் கண்டு பொறுக்காமல் , கம்ஸனை உதைத்த வீரக் கழலை உடைய திருவடிகளானவை நோகும்படியாக, (ஒரு இடத்தில் நில்லாது), புல்லைக்கண்டு பறந்தோடி திரியும், கன்றுகளின் பின்னே, என் மிருதுவான என் பிள்ளையை எதற்காக போகவிட்டேன், என்னே நான் பண்ணின பாவம் என்று வெறுத்து சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

சத்ருக்களை வென்று ஜயம் காண்பவன் ஆனாலும், ‘பிள்ளை’ என்றே சொல்கிறார்.

ஆயர் கோலத்தை, கன்றுகளின் பின்னே போகின்ற போதை நடையின் தொனியும், திருமேனியின் குறு வியர்ப்பும், அலைந்த திருக்குழல்களும், திருகையில் பிடித்த பொற்கோலும் என்று விவரிக்கிறார்.

வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து வாடுவதை போல், ஆயர்களுக்கு ஒரு இடர் வந்தால், முதலில் தனக்கு முகம் வாடும் படி இருப்பதால் ஆயர் கொழுந்தாய் என்றார். சுவாமி நம்மாழ்வாரும் ‘ஆயர் கொழுந்தாய்’ (திருவாய்மொழி 1.7.2)ல் அருளியதை நினைவில் கொள்ளலாம்.

மஞ்சனமாட்டி என்பதை, பொன் போல மஞ்சனமாட்டி (பெரியாழ்வார் திருமொழி 3.1.2) என்கிறபடியே, திருமேனி அழகு விளங்கும்படி திருமஞ்சனம் செய்து என்கிறார்.

கம்சனை சீறி உதைத்த திருவடிகள், ஏற்கனவே கஷ்ட பட்டு இருக்கும், மேலும் துயர் ஏற்படும்படி காட்டுக்கு அனுப்பிய பாவியேன் என்று தன்னுடைய பாவங்களை சொல்லி வருத்தப்படுகிறார்.

Leave a comment