திவ்ய பிரபந்தம்

Home

3.1.9 தாய்மார் மோர் விற்கப் போவர்

தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிறைப் பின்பு போவர், * நீ ஆய்ப்பாடி இளங்கன்னிமார்களை நேர் படவே கொண்டு போதி, * காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும், * ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பெரியாழ்வார் திருமொழி 3.1.9

தாய்மாரானவர்கள் மோர் விற்பதற்காக, (பெண்களை அகம் / வீடு பார்க்க வைத்துவிட்டு) அயலூருக்கு போவார்கள்; தகப்பன்மார்கள் இளம் பசுக்கூட்டத்தின் பின்னே, போவார்கள்;அந்த சமயம் பார்த்து நீ ஆயர்பாடியில் உள்ள இளம்கன்னி பெண்களை உன் நினைவுக்கு வாய்க்கும் இடங்களில் கொண்டு போகின்றாய்; உன் மேல் சீறி நின்ற சிசுபாலாதிகளுக்கு எப்போதும் உகக்கும்படியானவற்றையே செய்து உன் செயல்களை கண்டவர் (மனம் நொந்து) உறுத்திச் செல்லும் திரிகின்ற இடைக்குமாரனே, உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் கொடுக்க அஞ்சுகிறேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஆயர்பாடியில் இளம்பெண்களுடன் சேர்வதற்காக நீ நேரம் பார்த்து, அப்பெண்களின் தாய் தந்தையர் தங்கள் வீட்டிற்குக் காவலாக அப்பெண்களை நிறுத்தி விட்டு, தாம் மோர் விற்கவும் மாடு மேய்க்கவும் வெளியில் செல்லும்போது நீ அப் பெண்களை உனக்கு வேண்டிய இடங்களுக்கு அழைத்து கொண்டு போகின்றாய்; உன்னைப் பழிக்கின்ற சிசுபாலன் முதலியோர், நீ செய்த இத்தீம்புகளைக் கேட்டு கண்ணனை ஏசுவதற்குப் பற்பல சங்கதிகள் கிடைத்தன என்று மகிழும்படியாக இவ்வகைத் தீமைகள் செய்கின்ற உன்னை பிடித்தவர்களும் வெறுக்கும்படி, நீ இருந்தாலும் உனது மெய்யான ஸ்வரூபத்தை நான் அறிந்து கொண்டு, உனக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்கிறாள்.

Leave a comment