திவ்ய பிரபந்தம்

Home

3.1.8 வாளாவாகிலும் காணகில்லார்

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து * தோளாலிட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய், * கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன், * காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பெரியாழ்வார் திருமொழி 3.1.8

வெறுமனேயாகிலும், (நீ தீம்பு செய்யாதிருந்தாலும் என்று கருத்து), உன மினுக்குப் பொறாதவர்கள் ) உன்னைக் காண வேண்டார்கள்; (இப்படி இருக்கச் செய்தேயும்), அயல் பெண்களை உன அழகாலே மயக்கி, தோளாலே அணைத்து அப்பெண்களோடு ஒக்க நின்று விளையாடி வாயால் சொல்ல ஒண்ணாத தீம்புகளை நீ செய்தாய்; இடைக்குலத்தில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட பழியை கேட்கப் பொறுக்க மாட்டார்கள்; கெட்டேன் (என்ற இந்த வார்த்தை, வெறுத்து கை நெரித்துச் சொல்லும் வார்த்தை) இந்த ஆய்பாடியில் எனக்கு வாழ்வு இல்லை ; சாதுவான நந்தகோபருடைய குமாரனே, உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு அம்மம் கொடுக்க அஞ்சுகிறேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

‘நந்தகோபருக்கு ஆள்பட்டவனே!’ என்றது, அவருக்கு ஆள்படாது போனவனே என்று பொருளில் வரும். இந்த தீமைகளை நீ செய்யத் துணியாதபடி, அவர் உன்னைத் தனக்கு ஆட்படுத்திக் கொள்ளாததால் அன்றோ, நான் இன்று பழிச்சொல் கேட்க வேண்டியதாயிற்று என்கிறார். நீ தீம்பு செய்யாமல் வெறுமனே இருந்தாலும், உன்னுடைய அழகை கண்டு பொறாமை கொண்டவர்கள், உன்னை காண வேண்டார்கள். நீ மற்ற பெண்களை, மயக்கி, அவர்களை தோளில் அணைத்து, அப்பெண்களோடு விளையாடி, சொல்லபடாத காரியங்களை செய்கிறாய், இப்பழிகளை கேட்டு நான் பாவியாக வாழ்கிறேன், என்றும் உனக்கு மம்மம் கொடுக்க அஞ்சுகிறேன் என்றும் சொல்லி முடிக்கிறார்.

Leave a comment