மருட்டார் மென்குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி, * சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி, * பொருட்டாயமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றமல்லால் மற்றிங்கு, * அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
பெரியாழ்வார் திருமொழி 3.1.7
மிகவும் மதி மயங்க செய்யும் மிருதுவான சப்தத்தை கொடுக்கும் வேய்ங்குழலைக் கொண்டு போகத்துக்கு ஏகாந்தமான பொழிலிலே போய் புகுந்து அந்த வேய்ங்குழலை வாயில் வைத்து ஊதி அந்த ஆயர்களுடைய கிராமத்தில் உள்ள சுருண்டு பூவாலே அலங்கரிக்கப்பட்ட மிருதுவான கூந்தலை உடையவரான பெண்களானவர்கள் குழல்ஓசை தூண்ட வந்து, குழல் ஊதுகிற உன்னை நான்கு புறத்திலும் சேவித்த ஜோதிஸ் உடையவனாய் நின்ற என் பெருமானே, பெரும் தீம்புவான உன்னை, பிள்ளையாகப் பெற்ற தோஷமே தவிர, மற்றபடி இங்கு உள்ளவரோடு அர்த்த தாயம் (பங்கோ அல்லது சுற்றமோ) உடையேன் அல்லன் தீம்பனே, உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு அம்மம் கொடுக்க அஞ்சுகிறேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன் சர்வ மக்களுக்கும் மோகனமான ஸ்வரத்தை உடைய புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு, சோலைப் புறங்களிலேபோய், தான் விரும்பின பெண்களின் பேரைச்சொல்லுதலும், பெண்களின் கையைப் பிடித்துக் கொண்டும் முதலான ஒலியின் குறிப்புகள் தன்னோடு பழகும் பெண்கள் உணரும்படி, அக்குழலை ஊதியவன் என்கிறார். இந்த இசையை கேட்ட தம்தம் மாமியார் முதலியோரின் கட்டுபாட்டில் இருக்கின்ற பெண்கள் பரவசர்களாய் தங்களின் பார்த்து கொண்டு இருப்பவர்களையும் இலட்சியம் செய்யாமல் கண்ணன் இருக்கும் இடத்தை தேடி ஓடி வந்து அவனைச் சுற்றிக் கொள்ள அதனால் அவன் பிரகாசமான ஒளியை முகத்தில் பெற்றான் என்று கருத்து கூறபடுகிறது. ‘இப்படிப்பட்ட பெரிய தீம்புகளை செய்யும் பிள்ளையைப் பெற்றாயே பாவி’’ என்று, யசோதையை அனைவரும் இகழும்படியான நிலைமையை தான் பெற்றதாக கூறுகிறார்.
Leave a comment