திவ்ய பிரபந்தம்

Home

3.1.6 கரும்பார் நீள்வயல் காய்கதிர்

கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக் கற்றா நிறை மண்டித் தின்ன, * விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே, * சுரும்பார் மென் குழல் கன்னி யொருத்திக்குச் சூழ்வலை வைத்துத் திரியும், * அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பெரியாழ்வார் திருமொழி 3.1.6

விசாலமான வயலிலே கரும்பு போல எழுந்ததாய், பசுங்காயான கதிரை உடைய செந்நெல் தானியத்தை கன்றுகளை உடைய பசுக்கூட்டமானது மேல் விழுந்து தின்னும் போது தின்ன விருப்பம் இல்லாத ஒரு கன்றைக் கொண்டு விளாவின் பழங்கள் சிதறி விழும்படி, விட்டு எறிந்த உபகாரகனானவனே, (புஷ்பத்தின் மீது உள்ள ஆசையால்) வண்டுகள் படிந்து இருக்கிற மிருதுவான கூந்தலை உடையவளான நல்ல இளமையான ஒரு பெண் விஷயத்தில் தப்பாமல் அகப்படுத்திக் கொள்கிற திருக் கண்களாகிற வலையை வைத்து திரியும் தீம்பனே, உன்னை நான் அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுகின்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

எவ்வகையினாலாவது கண்ணனைக் கொல்ல வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ள கம்ஸன் பற்பல அசுரர்களைப் பற்பல வகையாக உருவெடுத்துத் தீங்கு செய்யும்படி ஏவி இருந்ததற்கு ஏற்ப ஓர் அசுரன் விளாமரமாய் வந்து நின்றான்; இன்னொரு அசுரன கன்றின் உருவம் கொண்டு, வயல்களில் கரும்பு போலக் கிளர்ந்துள்ள செந்நெற்களை மேய்ந்துகொண்டிருந்த பசுக் கூட்டங்களில் கலந்து அவற்றைப் போல் தானும் மேய்வது போல் பாவனை செய்து அச்செந்நெற்களை மேயாமல் இருக்க அதை கண்ட கண்ணன், அக்கன்றை ஒரு விளாமரத்தின் மேல் வீசி எறிந்த வரலாறு கூறப்படுகிறது.

தன் கண்களை, வண்டுகள் நிறைந்த மெல்லிய குழலையுடையவளான ஒரு கன்னிகையை அகப்படுத்திக் கொள்வதற்காக, எல்லாரையும் சூழ்ந்து கொள்ளக்கூடிய திருக்கண்களாகிற வலையை அவள் மேல் விரித்து வைத்து தீம்பு செய்பவனே; வாசுதேவன் வலை, (வண்துவராபதி மன்னன், மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே, திருவாய்மொழி 5.3.6) என்றும் தாமரை தடங்கண் விழிகளின் வலை (திருவாய்மொழி 6.2.9) என்றும் கார் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு (நாச்சியார் திருமொழி 14.4) என்றும் சொல்லப்படுகின்ற தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும், திருக் கண்களாகிற வலையை சொல்கிறார்.

Leave a comment