திவ்ய பிரபந்தம்

Home

3.1.4 மையார் கண்ட மட வாய்ச்சியர்

மையார் கண்ட மட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின்போய், * கொய்யார் பூந்துகில் பற்றித் தனி நின்று குற்றம் பலபல செய்தாய், * பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்குள கேட்டேன் ஐயா உன்னை அறிந்து கொண்டேன் * உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பெரியாழ்வார் திருமொழி 3.1.4

அஞ்சனத்தால் அலங்கரிக்கப்பட்ட கண்களை உடையவர்களான, ஆத்ம குணங்களில் பிரதானமான மடப்பத்தை உடையவர்களான இடைப் பெண்களை, அவர்கள் தாய்மார் முதலானோர் வசனங்களுக்கு ஆளாகாதபடி, உன்னுடைய சௌந்தர்யத்தினாலே மோகம் செய்து அவர்கள் பின்னே போய், கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை (கொய்ச்சகம் / கொசுவம் நிறைந்த புடவை) பிடித்து அவர்கள் பின்னே போய், தனியனாய் நின்று (ஏகாந்தமான இடங்களில்) எண்ணிறந்த தீம்புகளை பண்ணினாய்; பொய்யானவனே, உன் விஷயமாக பிறை பேசுகிற பொல்லாங்குகள் ஒரு புத்தகம் எழுதுகிற அளவுக்கு உள்ளன. என் காதால் கேட்டேன். விஷமங்களுக்கு எல்லாம் ஸ்வாமியானவனே, உன்னை நான் அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுகின்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணன் இடைப் பெண்களுடைய துகிலை பிடித்துக் கொண்டு அவர்கள் பின்னே போய் அவர்களோடு தனியான இடத்திலே இருந்து சொல்ல முடியாத தீம்புகளை செய்ததாகவும், அவன் செய்யும் தீம்புகளை எழுதத் தொடங்கினால் பெரியதொரு புத்தகமாக எழுத முடியும் என்கிறார். அம்மா, அவர்கள் சொல்வதும், நீ கேட்டதுமே உண்மை, நான் சொல்வதே சத்யம் என்பது போல கிருஷ்ணன் இருக்க, என்னே உன் தெளிவு என்று கொண்டாடுகிறாள்.

உலகத்தாரால் செய்ய முடியாதவற்றையும் செய்ய வல்லவன் என்று அவனை அறிந்து கொண்டு அதனால் அவனுக்கு அம்மம் தர அஞ்சுகிறேன் என்கிறார்.

Leave a comment