திவ்ய பிரபந்தம்

Home

3.1.3 கும்மாயத்தொடு வெண்ணெய்

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி, * பொய்ம் மாய மருதான அசுரரைப் பொன்று வித்து இன்று நீ வந்தாய், * இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார், * அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பெரியாழ்வார் திருமொழி 3.1.3

குழைய சமைத்த பருப்போடு வெண்ணையை விழுங்கியும் குடத்தில் நிறைத்த தயிரை அத்தோடு சாய்த்து அமுது செய்தும் பொய்யே ஆச்சரியமான மருதமரங்களை நின்ற அசுரர்களை விழுந்து முறியும்படி பண்ணியும் இப்போது நீ ஒன்றும் செய்யாதாரைப் போல வந்தாய் ; இப்படிப்பட்ட ஆச்சர்யங்களை செய்ய வல்லவனாய் பிள்ளைத்தனத்தால் பூர்ணமானவனை ! இப்படிப்பட்ட உன்னை நடு நின்றவர்கள் என்னுடைய பிள்ளையாக சொல்வார்கள்; சர்வ ஸ்வாமியானவனே, உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மருத மரங்களை முறித்து திரிகின்ற உன் விசேஷங்களை அறியாதவர்கள் உன்னை என் மகனாகச் சொல்லுவார்கள்; நான் அப்படி இல்லை; உன்னை நன்றாக அறிந்தவள், எல்லோருக்கும் சுவாமி என்று அறிந்து கொண்டவள்; ஆக உனக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்கிறார்.

Leave a comment