பொன் போல் மஞ்சனமாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால், * வன்பாரச் சகடம் இறச்சாடி வடக்கிலகம் புக்கிருந்து, * மின்போல் நுண்ணிடையால் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த, * அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
பெரியாழ்வார் திருமொழி 3.1.2
பொன் போல (வடிவழகு விளங்கும்படி), திருமஞ்சனம் செய்து அமுது செய்வித்து யமுனை நீராடப் போன நான் வருவதற்கு முன்னே, வலியதாய், பாரமாக இருக்கின்ற சகடமானது கட்டுக்குலைந்து அழியும்படி திருவடிகளால் உதைத்து இந்த வீட்டிற்கு வடக்கில் உள்ள வீட்டில் புகுந்து இருந்து மின்னலை ஒத்த மெல்லிய இடையை உடைய ஒரு கன்னியை மாறுபட்ட வடிவை உடையவள் ஆகும்படி செய்து, அன்பை உடையவனே, உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நான் ஒருநாள் உனக்கு நன்றாக திருமஞ்சனம் செய்து, அமுதூட்டி, உன்னைத் தொட்டிலில் தூங்க விட்டு யமுனையில் தீர்த்தமாடப் போக, அப்போது, குழந்தைகள் அழுவதைப்போலே காலைத் தூக்கி உதைத்து வலிய சகடத்தை முறித்துத் தள்ளினாய்; அன்றியும், அந்த இளம் பருவத்திலேயே வடக்கில் இருந்த வீட்டில் உள்ள ஒரு கன்னியை உருவம் மாறும் படி செய்தாய். இப்படி மனிதரால் செய்ய முடியாத செயல்களைச் செய்வதனால் ‘இவன் நம்மிலும் வேறுபட்ட கடவுள்’ என்று உன்னைத் தெரிந்து கொண்டேன்; ஆகையால் உனக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்கிறாள்.
Leave a comment