தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான், * பொன்னேய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும், * மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே, * அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
கீழ் பதிகத்தில், ஆயர்குல பெண்கள் கண்ணன் செய்த தீம்புகளை யசோதையிடம் சொல்லி முறையிட்டதை, யசோதையை போலவே தானும் அனுபவித்து பாடிய ஆழ்வார், இந்த பதிகத்தில், யசோதை பல காலமும் அவனை அம்மம் உண்ண அழைத்து, அம்மம் ஊட்டியும், அவனுடைய மனிதர்களுக்கு அப்பாற்பட்ட லீலைகளையும் கண்டு, அவன் தன்னுடைய பிள்ளை என்ற எண்ணத்தை தவிர்த்து, அவன் ‘ஆயர் புத்திரன் அல்ல, அரும் தெய்வம்’, சர்வேஸ்வரன் என்று உணர்ந்து உனக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்று பலவாறு பாடிய பாடல்களை தான் யசோதையாவே கொண்டு பாடிய பாடல்களை காணலாம்.
பெரியாழ்வார் திருமொழி 3.1.1
தனக்கு ஒப்பான ஆயிரம் பிள்ளைகளோடு தளர் நடை நடந்து வரும், பொன்னோடு ஒத்த நிறத்தை உடைய நெய்யோடு போக்கியமான பாலையும் அமுது செய்து, ஒரு வஞ்ச நெஞ்சம் கொண்டு பொய்யாக மின்னலை ஒத்த மெல்லிய இடையை உடைய வஞ்சகியான பூதனையானவள் மாளும்படி அவள் முலையிலே திருப்பவளத்தை வைத்து உண்ட பிரானே, அம்மே, இதற்கு முன் உன்னை என் பிள்ளையாக பாவித்து உனக்கு அம்மம் முதலிவற்றை கொடுத்தது உனக்கு தாரகம் என்று நினைத்து இருந்தேன்; ஆனால் உன் செயல்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட காரியங்களாக இருப்பதால் உன்னை, அரும் தெய்வம் என்று இன்று அறிந்து கொண்டேன்; ஆகையால் உனக்கு முலை கொடுக்க பயப்படுகின்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. அம்மே என்பது அச்சத்தால் சொல்கிற வார்த்தை.
கண்ணன் திருவாய்ப்பாடியிலே பிறந்தபோது அவனோடு கூட ஆயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். ஆகையால், பிறப்பாலும், வளர்ப்பாலும் வயதினாலும் அன்யோன்யம் உண்டான ஸ்னேகத்தாலும் தன்னோடு ஒத்த என்று சொல்கிறார். பால்யம் தொடங்கி பெருமாள் (இராமன்) இல்லாமல் தரிக்க முடியாத இளயபெருமாளை (லக்ஷ்மணன்) போல், அந்த பிள்ளைகளும் கண்ணன் இல்லாமல் தரிக்க முடியாமல் இருப்பதால், இவனும், இளமைத் தொடங்கி தன்னோடு கூடவே விளையாடித் திரிகின்ற அந்த பிள்ளைகளோடு, தளர்நடையிட்டு வருவான் என்று சொல்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து அங்குள்ள தயிர் நெய் பால் முதலியவற்றை எல்லாம் திருடி வயிறார விழுங்கிவிட்டு வருவதால் தவழ்ந்து நடை என்ற கற்பனையில் சொல்கிறார்.
புள்ளுவம் என்பது மெய் போல இருக்கும் பொய் ; உண்ட பின்பு உண்ணவில்லை என்று கூறுவது; அது அசத்யம் என்று தோன்றுகிறது; அப்படி இருந்தும் அதற்கு ஒரு வருத்தமும் இல்லாமல் தளிர் நடை நடந்து வந்தான் என்கிறார்.
உலகங்களுக்கு எல்லாம் ஓர் உயிரான தன்னை முடிக்க வந்தவளை முடித்தது, தன் அடியவர்களுக்கு அவன் செய்த உபகாரம். அந்த உபகாரம் ஆவது, ‘உலகங்கட்டு எல்லாம் ஓர் உயிரே ஓ‘ (திருவாய்மொழி 8.1.5) தன்னை முடிக்க வந்தவளை முடித்து விட்டு, யசோதையாகிற தன்னை நோக்கி வந்ததைச் சொல்கிறார்.
உன்னை அறிந்து கொண்டேன் என்று சொல்வது, ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம் (பெரியாழ்வார் திருமொழி 1.2.7) என்று சொன்னதை நினைவு கூறுகிறார்.
உனக்கு ஒருத்தி முலைக்கொடுக்க வந்து தான் பட்ட பாட்டை நான் அறிந்து உள்ளேன், ஆதலால் அஞ்சுகிறேன் என்கிறாள். துஞ்ச என்ற சொல்லை ‘சாவு’ என்ற பொருளில் சொல்லி, தீர்க்க நித்திரை அடையும்படி என்ற கருத்தில் மங்களமாக பயன் படுத்துகிறார்.
Leave a comment