வானத் தெழுந்த மழைமுகில் போல் எங்கும், * கானத்து மேய்ந்து களித்து விளையாடி, * ஏனத்து உருவாய் இடந்த இம் மண்ணினை, * தானத்தே வைத்தானால் இன்று முற்றும் * தரணி இடந்தானால் இன்று முற்றும்.
பெரியாழ்வார் திருமொழி 2.10.9
ஆகாயத்தில் நீர் கொண்டு எழுந்த மழைக்கால மேகம் போல (திருமேனி நிறம் கொண்டவன், நீருக்கும் சேற்றுக்கும் தகுந்தார் போல), வராஹ ரூபம் கொண்டு காட்டிலே எல்லா இடங்களிலும் சஞ்சரித்து கோரை கிழங்கு போன்றவற்றை அமுது செய்து செருக்கைஉடையதாய், விளையாடி அண்ட பித்தியில் நின்று மொட்டு விடுவித்து எடுத்த இந்த பூமியை, (‘நான்றில் ஏழ் மண்ணும் தானத்தவே‘, திருவாய்மொழி 7.4.3, என்பது போல), அதன் இடத்தில் வைத்தவனால் இன்று முற்றும், பூமியை இடந்தவனால் இன்று முற்றும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வானத்து எழுந்த மழை மேகம் போல் வராக உருவாய் உலகை இடந்ததானால் இன்று முற்றும்; இடந்த இம்மண்ணினை வைத்துக் கானகம் எங்கும் மேய்ந்து களித்து விளையாடியவனால் இன்று முற்றும் என்றும் பொருள் கொள்ளலாம். முன்பு ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு கடலில் மூழ்கிப் போன ஹிரண்யாக்ஷனைத் திருமால் தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால் மஹா வராஹமாகத் திருவவாதரம் செய்து பூமியைக் மூக்கினால் குத்தி எடுத்துக் கொண்டு வந்து பழையபடி வைத்து அருளினான் என்ற வரலாற்றை சொல்கிறார்கள்.
இப்படி பிரளய காலத்தில் பூமியை எடுத்தவன், எங்களை விரஹ பிரளயத்தே தள்ளி வருத்துகின்றாரானே என்றும் அவனால் இன்று முடிந்தோம் என்றும் சொல்கிறார்.
Leave a comment