தாழை தண்ணாம் பல் தடம் பெரும் பொய்கை வாய், * வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண், * வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் * ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் * அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்.
பெரியாழ்வார் திருமொழி 2.10.8
(கரையிலே) தாழைகளையும் (உள்ளே) குளிர்ந்த ஆம்பலை உடைய மிகவும் பெரிய தடாகத்தில் வாழ்கின்ற முதலையின் வலையில் அகப்பட்டு வருந்தின ஸ்ரீ கஜேந்தர ஆழ்வானுடைய மனத்துன்பமானது தீரும்படியாக நித்யசூரிகளுக்கு நிர்வாககனானவன், பெரிய திருவடியை மேற்கொண்டவனாய் சக்கராயுதத்தாலே (முதலையை துண்டாகும்படி செய்து அந்த சிறையை விடுவித்து), அந்த கஜேந்தரன் கையில் இருந்த பூவை தம் திருவடிகளில் இட்டு கொண்டவனாலே இன்று முடியும். அந்த கஜேந்தரனுக்கு அப்படி கிருபை பண்ணியவனால் இன்று முற்றும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற‘ (திருவாய்மொழி 3,5,1) என்று நம்மாழ்வார் கூறியது போல, மிகப்பெரிய பொய்கை. வைகு தாமரை வாங்கிய வேழம் (பெரிய திருமொழி 5.8.3) என்று திருமங்கை ஆழ்வார் கூறியது போல தாமரை நெருங்க பூத்து கிடக்கின்றது சொல்லப்பட்டது. கஜேந்தரன் உள்ளே துஷ்டத்தவம் இருக்கிறது என்று அறியாமல் தாமரை பூ பறிக்கைக்காக சென்றான்.
‘நம் சாபம் தீர்ந்து மோக்ஷம் அடைவதற்கு ஆனை வருவது எப்போதோ’ என்று இதே நினைவாக ஒரு முதலை அந்த பொய்கையின் உள்ளே காத்து இருந்ததால் ‘வாழும் முதலை’ என்று சிறப்பித்துச் சொல்கிறார்.
கண்ணன், கஜேந்திரன் என்று ஆனைக்காக ‘அயர்வரும் அமரர்கள் அதிபதி ஆனமை தோற்ற பெரிய திருவடியை மேற்கொண்டு சென்று, வேகவேகமாக நெடுந்தூரம் ஓடி, ‘கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்‘ (பெரிய திருமொழி 5.8.3) என்றபடி காரியம் செய்தவனால் இன்று முடிந்தோம்.
இதனால் அடியவனின் ஆர்த்தி தீர சென்று ரக்ஷித்தவன், அருகிலுள்ள எங்களின் ஆரத்தி தீராமல் இருக்கும்படி நடந்து கொள்வது, இதென்ன கொடுமை என்று முறையீடு செய்கின்றனர்.
Leave a comment