மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று, * மூவடி தாவென்று இரந்த இம் மண்ணினை, * ஓரடி இட்டு இரண்டாமடி தன்னிலே, * தாவடி இட்டானால் இன்று முற்றும் * தரணி யளந்தானால் இன்று முற்றும்.
பெரியாழ்வார் திருமொழி 2.10.7
மஹாபலியின் யாகக் கூடத்தில் பிரம்மாசாரி வேடத்தில் உடையவனாய் சென்று (என் காலாலே) ‘மூன்று அடி தா’ என்று யாசித்து நீர் ஏற்று பெற்ற இந்த பூமியை அதன் பரப்பு முழுவதும் தனக்கு உடையதாக ஒரு அடியை இட்டு, இரண்டாவது அடியினால் மேல் உலகங்கள் எல்லாம் தனக்கு உடையதாக தாவி அடி இட்டவனால் இன்று முடியும். பூமி மற்றும் வான் உலகங்களை அளந்தவனால் இன்று முற்றும்.
இந்திரனின் ஐஸ்வரியத்தை பலத்தால் அபகரித்துக் கொண்டு, ‘கோவாகிய மாவலி‘ (திருவாய்மொழி 9.8.7) என்றபடி தன் அரசாய் அழிக்க ஒண்ணாதபடி ஔதார்யம் என்று ஒரு குணம் தனக்கு உடையவனாய் இருந்த மஹாபலியின் யாகத்தில், அவனை ‘கள்ளக் குறளாய்‘ (பெரிய திருமொழி 5.1.2) என்று சொன்னபடி, சர்வமும் முடிப்பதற்காக வாமன வேஷம் கொண்டு தன் வடிவழகாலும், நடையழகாலும், அவன் சொன்னது மாறாமல் செய்யும்படி சென்று, அவன் சடக்கென்று இசைந்து தருகைக்காகவும் பின்பு ஒரு அடி அவனை சிறை வைப்பதற்காகவும், ‘என் காலாலே மூன்று அடி தா’ என்று இரந்து பெற்ற இந்த பூமியை, கண்ணன் தன்னை குறைத்துக்கொண்டு, அடியவர்களின் வேண்டுகோளை செய்து முடித்தவன் என்கிறார். இம் மண்ணினை என்று சொன்னது எல்லா உலகங்களையும் சொன்னதற்கு சமம்.
இதனால் தன்னை அழிய மாறினாலும், அடியவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அளிப்பவன் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருக்கிறான். அதனால் நாங்கள் முடிந்தோம் என்கிறார்கள்.
Leave a comment