திவ்ய பிரபந்தம்

Home

2.10.5 ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால்

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு, * பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு, * வேய்த் தடந் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு, * ஆப்புண்டிருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு * அழுதானால் இன்று முற்றும்.

பெரியாழ்வார் திருமொழி 2.10.5

ஆய்ப்பாடியில் இடையர்கள் மத்தை நாட்டி உடைத்த, (கடைவதற்காக வைத்த) தயிரையும், (காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும், அமுது செய்து, பிறகு ஒருக்கால் வெண்ணைய் களவு செய்யும் போது அந்த இடைபெண்கள் ஒளிந்திருந்து கண்டுபிடித்து கையில் பிடித்துக் கொள்ள, அவர்கள் கையில் பிடிபட்டு, (பசுமையாலும் சுற்றளவினாலும்) மூங்கிலை ஒத்த சுற்றினை உடைய தோள்களை உடையவர்களின் வெண்ணைய் களவு போகாமல், அவர்கள் வீட்டில் கட்டுப்பட்டு இருந்தவனால் இன்று முடிந்து போகும்; அவர்கள் கையால் அடிப்பட்டு இருந்தவன அழுவதனால் இன்று முடிந்து போகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தன் ஆவலின் அளவுக்கேற்ப தடாவினில் தன் கையில் உள்ள போகவிட்டு அளைகைக்கு உரிய தயிர் என்பதை அளைதயிர் என்று சொன்னார். சர்வ சக்தி உடைய ஸர்வேச்வரனுக்கு இடைச்சிகள் கையில் பிடியுண்டு அங்கிருந்து தப்பி போவது கடினமானது இல்லை என்றாலும், தப்பிப் போகாமல், அவர்கள் படுத்தின பாட்டுக்கெல்லாம் இசைத்திருந்தது, அந்த பெண்களின் வேய்ந்தடந் தோளினழகைக் பார்த்துக்கொண்டு இருப்பதற்காக என்று சொல்கிறார்.

இதனால் அனுகூலமான பெண்களுக்கு அகப்பட்டு, கட்டிவைத்து அடிக்கலாம் போல பவ்யமாய் இருந்து, இன்று எங்களுக்கு பவ்யம் இல்லாமல் மிடுக்குடன் இருப்பதால் நாங்கள் இன்று முடிந்தோம் என்கிறார்கள்.

Leave a comment