திவ்ய பிரபந்தம்

Home

2.10.3 தடம்படு தாமரைப் பொய்கை

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி, * விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து, * படம் படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு, * உடம்பை அசைத்தானால் இன்று முற்றும், * உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.

பெரியாழ்வார் திருமொழி 2.10.3

(உள்ளே குதித்து), விசாலமான தாமரைப் பொய்கையை கலங்கச் செய்து அதனால் சீறி விஷயத்தை உமிழ்ந்து கொண்டு கிளர்ந்த காளிய சர்ப்பத்தை (பாம்பினை) வாலை பிடித்து இழுத்து பெரிதான படங்களின் மேல், கோபத்தாலே அதன் தலை மேல் பெரிய விசையோடு குதித்து, விஷத்தை கக்கும்படி குதித்து திருமேனியை அசைத்து ஆடினவன் தன்னால் இன்று முற்றும்; அக்காளியன் படத்தின் மேல் அவன் இளைத்து விழுந்து சரணம் புகுமளவும் நெருங்க மிதித்து நின்றவனால் இன்று முடிந்து போகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இடையர்களுக்கும் பசுக்களும் தாகம் தீர்க்கும் தாமரை பொய்கையின் நீரை காளியன் வந்த பிறகு நச்சு நீராய் மாறியது பற்றி சொல்கிறார். நெடு நாளாய் கிடந்த காளிய நாகத்தின் குரோதத்தையும் கிளர்த்தியையும் அவன் பணங்களில் இவன் குதித்தபடியையும் நாங்கள் கரையில் இருந்து இவன் பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொள்ளப் போகிறான் என்று நடுநடுங்கி அஞ்சி கிடந்தவர்கள் மனம் மகிழ, உடம்பு அசைந்து கூத்தாடி, அவன் கொழுப்பினை அடக்கிய சரித்திரத்தை சொல்லி ஆய்ச்சிகள் மகிழ்ந்தார்கள். இதை பார்த்து நாங்கள், உயிர் தரிப்பது மிகவும் அரிது என்று கூறுகிறார்கள்.

இதனால், விரோதியை அடக்கி, அனுகூலர்களுடைய வயிற்று எரிச்சலை போக்கியவன், தன் விளையாட்டுக்களால், இப்படி நாங்கள் வயிறு எரியும்படி செய்தான் என்கிறார்கள்.

Leave a comment