திவ்ய பிரபந்தம்

Home

2.10.2 குண்டலம் தாழக் குழல் தாழ

குண்டலம் தாழக் குழல் தாழ நாண்தாழ, * எண் திசையோரும் இறைஞ்சித் தொழுதேத்த, * வண்டு அமர் பூங்குழலார் துகில் கைக்கொண்டு, * விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்.

பெரியாழ்வார் திருமொழி 2.10.2

காது குண்டலங்கள், தோள் அளவும் தாழ்ந்து அசைய திருக்குழல் கற்றை அத்தோடு தாழ்ந்து அசையவும் திருக்கழுத்தில் சாத்தின விடு நாணானது திரு உந்தி அளவும் தாழ்ந்து அசையவும், எட்டு திக்கில் உள்ள தேவர், முனிவர் முதலியவர்கள் எல்லோரும் இறைஞ்சி, முழுவதும் வணங்கி துதிக்கவும், வண்டுகள் படிந்து கிடக்கிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தலைமுடியை உடைய ஸ்த்ரீகளின் புடவைகளை வாரிக்கொண்டு ஆகாயத்தை அளாவிய குருந்த மரத்தின் மேல் ஏறி நின்றவனால் இன்று முடிந்து போகும். துகிலைப் பணிந்து அருளாய் என்று வேண்டினாலும் அவற்றை கொடாதவனால் இன்று முடிந்து போகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை

கண்ணன், இடைச்சிகள் கரையில் களைந்து வைத்திருந்த புடவைகளை தான் கைக் கொள்ளும் போது குனிந்து எடுக்க வேண்டியிருந்ததால், காது குண்டலங்களும், குழலும், கழுத்தில் அணிந்த நகை, நாணும் தாழப் பெற்றன. பரமாத்மாவான கண்ணன் இவ்வாறு இடைப்பெண்களோடு விளையாடவும், இது என்ன அவனுடைய ஸெளசீல்யம், என்று பலரும் புகழ்ந்து நிற்பர். ‘இறைஞ்சி’ ‘தொழுது’ என்பவை ‘வணங்கி’ என்ற பொருளில் வரும். இங்கு ‘இறைஞ்சி’ என்பதனால் மனத்தினால் சொன்ன வணக்கத்தையும், ‘தொழுது’ என்பதனால் கைகளினால் செய்த வணக்கத்தையும் சொல்கிறார்கள் என்று கொள்ளலாம். ஆகாசம் வரை ஓங்கி உயர்ந்துள்ள மரம் என்றும் இன்று முழுவதும் கேட்டும் தரவில்லை, இருந்தாலும் எங்கள் வாழ்வு முற்றும் என்று சொல்கிறார்கள். எங்களுடைய குழலைக் கண்டு மகிழ்ந்து கூட இருந்து அனுபவிக்காமல் மரத்தின் மேல் ஏறி கிடப்பதே என்ற வயிற்றெரிச்சல் தோன்ற கூறுகிறார்கள்.

Leave a comment