திவ்ய பிரபந்தம்

Home

2.10.1 ஆற்றிலிருந்து

ஆற்றிலில் இருந்து விளையாடு வோங்களை, * சேற்றால் எறிந்து வளை துகில், கைக்கொண்டு, * காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு மாற்றமும், * தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்.

கீழ் பதிகத்தில் மற்றைய வீடு பெண்கள், கண்ணன் வெண்ணை, பால் இவற்றை எடுத்து தின்று செய்த தீம்புகளை சொல்லி, அவனை அழைத்துக் கொண்டு செல்ல சொல்கிறார்கள். கண்ணன் ஊர் உலகங்களில் செய்த நவநீத லீலைகளை அனுபவித்த ஆழ்வார் இந்த பதிகத்தில், அவன் இளமை காலத்தில் பெண்களுடன் செய்த குறும்புகளை அனுபவிக்கிறார். அவனோடு ஈடுபட்ட பெண்கள், யசோதையிடம் வந்து அவன் செய்த தீம்புகளை சொல்கிறார்கள். அவன் அடியவர்களை காப்பாற்றுபவனாக, எளியவனாக, நற்குணங்கள் உடைய கண்ணனாக, பூதனையின் கையில் அகப்படாமல் தங்களுக்கு விளையாட கொடுத்த கண்ணனாக, அடியவர்களின் ஆசைகளை அறிந்து நிறைவேற்றுபவனாக, பூமி பிராட்டிக்காக பூமியை மீட்டுக் கொடுத்தவனாக, செய்த கண்ணன் தங்களிடம் குற்றம் செய்தான் என்று கூறினார்கள். அப்படி இருந்தும் அவன் இல்லாமல் ஜீவிக்க முடியாது என்றும், நாங்கள் முடிந்தோம் என்று சொல்லி பாடிய பாடல்களை ஆழ்வார் இங்கு அனுபவிக்கிறார்.

பெரியாழ்வார் திருமொழி 2.10.1

யமுனை ஆற்றங்கரை மணலில் இருந்து தோழிகளுடன் விளையாடுகிற எங்கள் மேல் சேற்றை இட்டு எறிந்து எங்கள் வளைகளையும் புடவைகளையும் வாரிக்கொண்டு காற்றைக் காட்டிலும் விரைவாக ஓடி வீட்டின் உள்ளே நுழைந்து நாங்கள் கூப்பிட்டு இரந்தாலும் அதற்கு ஒரு மறுமொழியும் கொடாத கண்ணனால் இன்று முடிவோம்; வளையின் விஷயமாக தருவேன், தரமாட்டேன் என்று ஒன்றும் பேசாததனாலே இன்று முடிவோம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. ஆற்றாமையின் மிகுதியால் இரண்டு முறை சொல்கிறார்கள்.

எங்களது என்று உரிமை கொண்டாடும் இடத்தில் இல்லை; எல்லோரும் வந்து போகும் சாதாரணமான ஸ்தலத்தில் தான் இருந்தோம். கண்ணன் நினைத்த படி தீம்புகள் செய்ய முடியாதபடி உள்ள இடத்திலே தானே நாங்கள் இருந்தோம். நாங்கள் முன்னால் தீமைகள் செய்தவர்கள் இல்லை; அவனை கடைகண்ணால் தரிசித்ததும் இல்லை; கண்ணன், பிறர் அறியாதபடி கையால் தொட்டுச் சில விஷமங்கள் செய்தாலும் ஒரு குறையும் இல்லை; பிறர்க்கு தெரியும்படி, அவர்கள் இது என்ன என்று கேட்கும் படி சேற்றை விட்டு எறிந்தானே என்று வருந்துகின்றனர்.

நாங்கள் குளிக்கைக்காக கழட்டி வைத்து இருந்த வளையல்களையும் புடவைகளையும் வாரிக்கொண்டு, அகப்படாமல் காற்றை காட்டிலும் வேகமாக ஓடி தன் ஜீவனம் ஒன்றும் குறை இல்லாமல், எங்கள் ஜீவனதை மட்டும் எடுத்து சென்றான்; அவனுக்கு ஜீவனம், இவர்களின் வளை மற்றும் புடவைகள்; இவர்களுக்கு ஜீவனம், அவனுடைய வடிவழகு,

விளையாடினால் அங்கும் தான் வந்து தீமை செய்து விட்டு ஓடி ஒளிந்துகொண்டது மட்டும் இன்றி ஒருவார்த்தையும் பேசாமல் சென்ற உன் பிள்ளையின் தீம்பின் காரணமாக நாங்கள் உயிரை இழக்க வேண்டி உள்ளது என்று சில ஆய்ப்பெண்கள் யசோதையிடம் முறை இடுகிறார்கள். கண்ணன் விளையாடியது குற்றம் இல்லை, பேசாமல் சென்றதே குற்றம் என்று பேசுகிறார்.

வளையையும் உடைகளையும் தாராது சென்றாலும் வாயில் இருந்து ஒரு வார்த்தை பேசி இருந்தால் உயிர் தரித்திருப்போம் என்றும், அவன் எதுவும் பேசாததால் உயிரை இழந்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி முடிக்கிறார்கள்.

Leave a comment