திவ்ய பிரபந்தம்

Home

2.9.9 கன்னல் லட்டுவத்தோடு சீடை

கன்னல் லட்டுவத்தோடு சீடை கார் எள்ளினுண்டை கலத்திலிட்டு, * என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான், * பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக்கின்றான், * உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.

பெரியாழ்வார் திருமொழி 2.9.9

யசோதை நங்காய், கருப்புக்கட்டி பாகுடன் சேர்ந்த லட்டுடன், சீடையும், கருப்பு எள் இட்டு வாரின எள்ளுருண்டையும், கலத்திலே வைத்து ‘என் வீடு ஆகையால் இங்கே புகுவாரில்லை’ என்று நினத்து நான் வெளியே வந்தேன்; (அந்த சமயத்தில்) இந்த பிள்ளை உள்ளே புகுந்து அப்பணியாரங்களை எனக்கு ஒன்றும் கிடைக்காதபடி செய்து வந்தான்; மறுபடியும் வீட்டிலே புகுந்து உரியை பார்த்து, மிகவும் செவ்வியை உடைய பசு வெண்ணையும் உண்டோ என்று ஆராய்கின்றான்; இந்த தீம்புகள் எனக்கு பொறுக்க முடியவில்லை; குண பூர்த்தி உடைய யசோதை, உன் பிள்ளையும் உன்னை போல குண பூர்த்தி உடையவனாகவும்படி அழைத்துக் கொள்; இப்படி இவனை தீம்பில் வளரவிடுவதும் ஒரு வளர்ப்போ என்று பெண்கள் முறையிடுவது இந்த பாடலின் பொழிப்புரை.

முன்பு கண்ணன் யசோதையால் அழைக்கப்பட்டும் வாராமல் மற்றொருத்தி வீட்டில் சென்று அங்குள்ள பக்ஷ்ணங்களை எல்லாம் தானே சாப்பிட்டு இவ்வகையான தீமைகளை செய்ய அந்த வீட்டுக்காரி யசோதையிடம் வந்து முறையீடு செய்கிறார்கள். ‘கன்னல்’ என்பது இலட்டு, சீடை, எள் உருண்டை போன்ற எல்லா பக்ஷணங்களோடும் சேர்த்து கொள்ளலாம். அவற்றில் நானும் சில பெறும்படி இல்லாமல் முழுவதையும் தானே வாரியுண்டான் என்றும் குறை கூறினாள். ‘உன் மகன் தன்னை அழைத்து கொள்வாய்’ என்று அவள் கூறுகையில், அவன் மேல் குற்றம் கூறுவதுதான் உங்களுக்கு வேலையோ, சிறு பிள்ளைகள் இவ்வாறு செய்வது இயல்பு தானே, உங்கள் பிள்ளைகள் எல்லாம், உங்களுக்குக் கீழ் படிந்து நடக்கின்றனவோ’ என்று யசோதை அவளை வெறுத்து நிற்க, அதற்கு அவள் ‘அவன் செய்தவற்றுக்கு மேலே இவையும் சிலவே ‘ என்று சொல்லி முடிக்கிறார்.

Leave a comment