கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே, * நேசமிலாதார் அகத்திருந்து நீ விளையாடாதே போதராயே, * தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று, * தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே.
பெரியாழ்வார் திருமொழி 2.9.8
அழகிய தலைமுடியை உடையவனே, இங்கே வாராய்; ‘வரமாட்டேன்’ என்று சொல்லாமல் இங்கே வாராய்; இங்கு சற்று விளையாடி வருகிறேன் என்கிற நீ உன்னிடத்தில் ஸ்னேகம் இல்லாதவர்களின் வீடுகளில் நின்று விளையாடுவது மட்டும் இன்றி, உன்னை தூஷிக்கிற (திட்டுகிற) இடைச்சிகளுக்கு, அடிச்சிகளாக போகிறவர்களும், இடையர்களுக்கு அடியவராக போகிறவர்களும் நிற்கிற இடங்களில் இருந்து இங்கே வாராய்; தாய் வார்த்தையை மேல் கொண்டு நடப்பது தர்மம்; (நீ தான் பிறந்த போதே அம்மாவின் வார்த்தைகளை கேட்டவன் ஆயிற்றே; எம்பெருமான் திருஅவதாரம் செய்தபோது, நான்கு திருக்காரங்களுடன் இருந்தான் என்றும், தேவகி பிராட்டி இந்த குழந்தையை இப்படி நான்கு கரங்களுடன் கம்ஸன் பார்த்தால் என்ன செய்வானோ என்று பயந்து இரண்டு கரங்களுடன் காட்சி அளிக்க வேண்டியபடி செய்தவன்;) தாமோதரனே, (கயிற்றை இட்டு வயிற்றிலே காட்டலாம்படி, நான் சொன்ன வார்த்தைகளை கேட்டவனே), இங்கே வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உன் மேல் குற்றம் குறைகள் கூறும் அவர்கள் உள்ள இடங்களில் இருந்து கொண்டு விளையாடாமல், அசைந்திடும் குழலழகும் நீயுமாய் வரும் நிலையைக் கண்டு நான் மகிழும்படி இங்கு வா என்று அழைக்கிறாள். தாமோதரா, என் கயிறுண்டு, உன் வயிறுண்டு, அங்கு நின்று பெறும் பேறு என்ன என்று சொல்கிறார்.
Leave a comment