திவ்ய பிரபந்தம்

Home

2.9.7 செந்நெல் அரிசி சிறு பருப்பு

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால், * பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசறிவன், * இன்ன முகப்பன் நானென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான், * உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.

பெரியாழ்வார் திருமொழி 2.9.7

யசோதை நங்காய், செந்நெல் அரிசியும், சிறு பயற்றம்பருப்பும், தோஷம் இல்லாமல் காய்ச்சினத் திரட்டின கருப்புக்கட்டியும் மணமிக்க நெய்யும் பாலும் ஆகிற இவற்றால் பன்னிரெண்டு திருவோணம் நோன்புக்கு பாயச பூபங்கள் சமைத்தேன்; முன்பும் இப்பிள்ளையின் தன்மையை அறிவேன்; திருவோணத்திற்காக சமைத்தவற்றை எல்லாம் முழுவதுமாக விழுங்கி (அவற்றில் திருப்தி அடையாதவனாய்) இன்னமும் நான் விரும்புகின்றேன் என்று சொல்லி அவ்விடம் விட்டு சென்று ஒன்றும் அறியாதவன் போல நிற்கிறான்; (ஆதலால்) உன் பிள்ளையை அழைத்துக்கொள் ; பிள்ளைகளை தீம்பு செய்ய விட்டு இருக்கிற இதுவும் ஒரு பிள்ளை வளர்க்கையோ என்று பெண்கள் முறையிடுகிறார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணன் வேறொருத்தியின் வீட்டிலே புகுந்து, அவள் நோன்புக்காகச் சமைத்து வைத்துள்ளவற்றை முழுவதும் வாரி விழுங்கி விட்டு, வேறு பொருட்களை தேடுபவன் போல அபிநயம் செய்து வெளியே வந்து நிற்க, இந்த விளயாட்டை கண்ட அவள் தாங்கமாட்டாமல் யசோதையிடம் வந்து முறையிடுகின்றனர். யசோதை பிள்ளை வளர்க்கும் முறையும் அவன் தீமை செய்யும் திறமையும் மற்றவர்கள் வந்து முறையீடு செய்வதும் என்ற கருத்தைக் காட்டும் பாடல்.

Leave a comment