திவ்ய பிரபந்தம்

Home

2.9.6 போதர கண்டாய் இங்கே

போதர கண்டாய் இங்கே போதர கண்டாய் போதரே னென்னாதே போதர கண்டாய், * ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேசநான் கேட்க மாட்டேன், * கோது கலமுடைக் குட்டனேயா குன்றெடுத் தாய் குடமாடு கூத்தா, * வேதப் பொருளே என்வேங்கடவா வித்தகனே, இங்கே போதராயே.

பெரியாழ்வார் திருமொழி 2.9.6

எல்லோராலும் கொண்டாடத்தக்க சீர்மையை உடைய பிள்ளாய் வாராய்; கோவர்தன மலையை குடையாக எடுத்தவனே, குடம் எடுத்து ஆடின கூத்தை உடையவனே, சகல வேதங்களுக்கும் பொருள் ஆனவனே, என்னுடையவன் என்றபடி திருவேங்கடமலையில் நிற்கின்றவனே, ஆச்சரியமான சக்தி உடையவனே, (அவ்விடத்தை விட்டு) இங்கே விரைந்து ஓடி வா; வர மாட்டேன் என்று சொல்லாமல் வாராய்; அருகில் உள்ள வீட்டுக்காரர்கள் உன விஷயமாக வாக்கால் சொல்ல ஒண்ணாத தோஷங்களை சொல்லி, என் காதால் கேட்கவும், வாயால் சொல்லவும் ஒண்ணாதவற்றை சொல்ல, உனக்குத் தாயான நான் கேட்டு பொறுக்க மாட்டேன்; (ஆதலால்) இங்கே வாராய் என்று யசோதை கண்ணனை அழைக்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

குழந்தையை கூப்பிடும் போது, எல்லோருடைய கொண்டாட்டங்களுக்கும் காரணம் ஆனவனே, பசுக்களையும் பசு கூட்டங்களையும் கோவர்த்தன கிரியை தூக்கி காப்பாற்றியவனே, குடக்கூத்தாடு செய்பவனே, மேலே சொன்ன இரண்டாலும், இந்த குலத்துக்கு ரக்ஷகனாய் வந்தவனே, இந்த குலத்தில் பிறப்பால் வந்த ஐஸ்வரியமே உனக்கு ஐஸ்வர்யம் என்று நினத்து இருப்பவன் அன்றோ நீ, இதற்கு ஈடாக நீ வசிக்க வேண்டும் என்கிறாள். வேதங்களுக்கு பொருளாய் இருப்பவனே, அப்படி வேதங்களில் மட்டும் இருந்து கேட்டு போக முடியும் என்று இல்லாமல், கண்ணால் காணலாம் என்று இருக்கும்படியும், என்னுடையவன் என்று சொல்லும்படியும், வானவர்க்கும் வைப்பான திருமலையில், இரண்டு விபூதிகளில் (நித்ய விபூதி மற்றும் லீலா விபூதி) இருப்பவர்களையும் ஒரே இடத்தில் இருந்து அனுபவித்துக்கொண்டு இருப்பவனே, வியக்கத் தக்கவனே என்று சொல்லி உன்னுடைய குறைகளை சொல்லி இருப்பவர்கள் இருக்கும் இடத்தில் இல்லாமல் உன் குணநலன்களை சொல்லும் இவ்விடத்திற்கு வா என்பது போல அமைந்துள்ள பாசுரம்.

Leave a comment