திவ்ய பிரபந்தம்

Home

2.9.11 வண்டு களித்திரைக்கும் பொழில்

வண்டு களித்திரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென்னரங்கன், * பண்டவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல், * கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி, * எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே.

பெரியாழ்வார் திருமொழி 2.9.11

வண்டுகள் மது பானத்தால் களித்து பேரொலியுடன் பாடுகின்ற சோலைகளாலும் அந்த சோலைகளுக்காகப் பெருகி வரும் நீரை உடைய திருக்காவேரியாலும் சூழப்பட்ட அழகிய திருவரங்கத்தில் நித்ய வாசம் செய்கின்ற, அப்படிபட்ட வைபவத்தை உடையவன் விபவாவதாரத்தில் செய்து அருளின விளையாட்டு செய்கைகள் எல்லாவற்றையும் விஷ்ணுவை மனதில் உடைய பிராஹ்மன உத்தமரான பெரியாழ்வார் பாடின பாடலாகிய இந்த பாசுரங்களை வாயாரப்பாடி உடம்பு இருந்த இடத்தில் இல்லாமல் ஆட வல்லவர்களாய் கோவிந்தன் ஆன கண்ணனுக்கு தாசபூதர்களாய் (அடியவர்களாய்) எட்டு திசைகளிலும் இருள் நீங்கும்படி விளக்காக விளங்கி நிற்கும் அவர்களுடைய சேர்த்தி அழகை உடையதான திருவடிகள் என் தலை மேல் வசிப்பவைகளாக இருக்கும் அல்லது அவர்கள் திருவடிகளை என் சென்னியில் சூடுவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பகவத் விஷயத்திலே நான் பேசின பாசுரங்களைப் பாடிப் பாடி உத்தம பாகவதர்களாய் எங்கும் புகழ் பெற்று விளங்கும் அவர்களது திருவடிகளை என் முடி மேல் அணிவேன் என்று ஆழ்வார் சொல்லி முடிக்கிறார். இதனால் இத்திருமொழி கற்பாருடைய சிறப்பும் இவர்களிடத்தில் தமக்குள்ள கெளரவமும் தெரிவிக்கப்பட்டன.

Leave a comment