சொல்லில் அரசிப்படுதி நங்காய் சுழலுடையன் உன் பிள்ளை தானே, * இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு, * கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து, * நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல்லேன் என்று சிரிக்கின்றானே.
பெரியாழ்வார் திருமொழி 2.9.10
குணபூர்த்தியான யசோதை, உன் மகன் செய்த தீம்புகளைச் சொன்னால், கோபித்துகொண்டு நிற்கிறாய்; உன் பிள்ளை பற்பல வஞ்சகங்களை செய்கிறான்; என் வீட்டில் நுழைந்து, என் பெண்ணை பேர் சொல்லி அழைத்து, அவள் கையில் இருந்த அடையாள வளையை கழற்றி கொண்டு போய் கொல்லையில் இருந்து தெருவில் கொண்டு வந்து, அங்கு நாவல் பழம் விற்ற ஒரு பெண்ணுக்கு அந்த வளையை கொடுத்து தன் மேனியோடு ஒத்த அழகியதான நாவற்பழங்களை வாங்கி கொண்டு, (போதும், போதாது என்று சொல்லுகிற போது, நான் கண்டு ‘இவ்வளை இவளுக்கு நீ தந்தாயா’ என்று கேட்க), இந்த வளை கொடுத்தவன் நான் இல்லை ‘ என்று சொல்லிக் கொண்டு சிரிக்கின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
புண்ணின் மேல் புண்ணாவது மாதிரி, மற்றொருத்தி வந்து கண்ணன் தன் வீட்டில் செய்த தீமைகளைச் சொல்லி முறையீடு செய்கின்றாள். நாவற் பழக்காரியின் கையில் வளையிருக்கக் கண்டு, இந்த வளை உனக்கு எப்படி வந்தது என்று இவள் கேட்க, அவள் ‘இதை எனக்கு கண்ணன் தான் தந்தான்’ என்று சொல்ல, இவள் ‘நீயா இவளுக்கு வளையை கொடுத்தாய் ‘ என்று கண்ணனிடம் கேட்க, அதற்கு அவன் “நான் இல்லை, நான் உன் வீட்டில் புகுந்ததை பார்த்தாயா, உன் மகளைப் பேர் சொல்லி அழைத்தேனா ? கையில் வளை கழற்றினது கண்டாயா? போல சில சொற்களை சொல்லி அவர்கள் மறு பேச்சு பேச முடியாதபடி சிரித்து நின்றான்.
Leave a comment