திவ்ய பிரபந்தம்

Home

2.9.5 பாலைக் கறந்து அடுப்பேற

பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகள் இருப்ப * மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன், * சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான், * ஆலைக் கரும்பின் மொழியனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்.

பெரியாழ்வார் திருமொழி 2.9.5

ஆலையில் இட்டு ஆடத்தக்க கரும்பை ஒத்த மதுரமான வாக்கை உடையவளாய் ஸ்த்ரீத்வ பூர்த்தியை உடைய யசோதை, பல வளைகளை உடைய என் மகளானவள், (வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்) (திருப்பாவை 3) பசுக்களினால் உண்டான பாலை எல்லாம் கறந்து அடுப்பின் மேல் ஏற்றி வைத்து, அதற்கு காவலாய் இருக்க மேற்கு பக்க வீட்டில் இது காய்ச்சுவதற்கு என்று நெருப்பு எடுத்து வருவதாகப் போய், ஒரு சிறிய நேரம் அவ்வீட்டில் பேசிக்கொண்டு இருந்தேன், அப்போது ஸ்ரீ சாளக்ராமத்தை இருப்பிடமாய் உடைய குறை ஒன்றும் இல்லாதவன், அந்த பாத்திரத்தை சாய்த்து அதில் இருந்த பாலைக் குடித்து வந்து நின்றான்; (ஆகையால் இனி அவன் எங்கள் வீட்டில் தீம்பு செய்யாதபடி), உன் பிள்ளையான கண்ணனை உன் அருகில் அழைத்துக் கொள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணபிரான் தன் தாய் வியக்கும்படி சில செய்கைகளைச் செய்து அவற்றால் அவளை மகிழ்வித்து, மீண்டும் முன்பு போல் பிறர் வீடுகளில் புகுந்து, பால் வெண்ணை முதலியவற்றை எடுத்து குறும்புகள் செய்ய, மேற்கு பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்த ஒரு ஆயர் குலத்து பெண், யசோதை அருகிலே வந்து, தன் வீட்டில் கண்ணன் செய்த குறும்புகளைச் சொல்லி முறை இடுகின்றாள்; இங்கு ஆழ்வார் கண்ணனை குறிப்பிடும் போது, சாளக்ராமத்தில் நித்யவாஸம் செய்பவன் என்கிறார். இங்கு ஆயர் குலத்துப் பெண் வீட்டில், அவள் பாத்திரத்தில் பாலை எடுத்து, அடுப்பின் மேல் வைத்து, பக்கத்து வீட்டிற்கு சென்று நெருப்பு வாங்கி வருவதற்குள், கண்ணன் பாலை குடித்து, பாத்திரத்தை உருட்டி விட்டு சென்று விட்டான் என்கிறார்.

Leave a comment