திவ்ய பிரபந்தம்

Home

2.9.4 கொண்டல் வண்ணா இங்கே

கொண்டல் வண்ணா இங்கே போதராயே, கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே, * தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே, * உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி தானும், * கண்டு எதிரே சென்று எடுத்துக் கொள்ளக் கண்ணபிரான் கற்ற கல்வி தானே.

பெரியாழ்வார் திருமொழி 2.9.4

காளமேகம் போன்ற வடிவை உடையவனே, இங்கே வாராய்; ‘கொண்டல் வண்ணனை வெண்ணைய் உண்ட வாயன் (அமனாலாதிபிரான் 10) என்றபடி திருவரங்கம் பெரிய கோவிலிலே வசிக்கின்ற பிள்ளையே ! இங்கே வாராய்; நீர்மலமான அலைகளை உடைய புனலாலே சூழப்பட்ட திருப்பேர்நகரில் கண் வளர்ந்து அருளின ஸ்ரீமன் நாராயணனே, இங்கே அம்மு உண்ண வா (என்று கண்ணனை தாயானவள் மரியாதையுடன் அழைக்கிறாள்;) நான் அம்மம் உண்டு வந்தேன் காண்; என்று சொல்லி விரைவாய் வந்து வீட்டுக்குள் நுழைய தாயான யசோதையும் இவன் வரவைக் கண்டு எதிரே போய் மருங்கி எடுத்துக் கொள்ளும்படி கண்ணன் கற்ற கல்வி இருந்தபடி என்று மனம் மகிழ்கிறார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

யசோதை கண்ணனை பலவாறு புகழ்ந்து ‘கண்ணா! வா’ என்று அழைக்க, அவன் மகிழ்ச்சியோடு “அம்மம் உண்ண வந்தேன்“ என்று சொல்லி ஓடி வந்து வீட்டினுள் புக, யசோதை அவன் வந்த அழகையும் முகமலர்த்தியையும் கண்டு மகிழ்ந்து அவனை எதிர் கொண்டு அவனைத் தன் இடுப்பில் ஏற்றி அணைத்துக் கொண்டதை ஆழ்வார் ‘கண்ணன் கற்ற கல்வி’ என்று வியக்கிறார். தாயான யசோதை வியக்கிறாள் என்றும் சொல்லலாம். கண்ணன் முன்பு செய்த தீமைகளைத் தாயாகிய தான் மறந்துவிட்டு அவனை எதிர் சென்று எடுத்து கொள்ளும்படி செய்த விசித்திரத்தில் ஈடுபட்டு இவனை புகழ்ந்து மகிழ்ந்து பொலிகிறாள். ‘கொண்டல்வண்ணன்’ ‘திருவரங்கத்து பிள்ளை’ ‘திருப்பேர் நகரில் உறையும் திருநாரணன்’ என்பன கண்ணனை குறிக்கும்.

Leave a comment