திவ்ய பிரபந்தம்

Home

2.9.3 திருவுடைப் பிள்ளை தான் தீயவாறு

திருவுடைப் பிள்ளை தான் தீயவாறு தேக்கம் ஒன்றுமிலன் தேசுடையன் * உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான், * அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ அசோதாய் * வருக வென்று உன் மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மது சூதனனே.

பெரியாழ்வார் திருமொழி 2.9.3

யசோதை பிராட்டியே, ஐஸ்வர்யத்தால் குறைவில்லாத உன் பிள்ளையான கண்ணன் தான் தீம்பு செய்யும் வகைகளில் சிறிதேனும் தேக்கம் இல்லாதவனாய், அதுவே தனக்கு தேஜஸ்ஸாக இருப்பதாக நிற்கிறான்; உருக்குவதற்காக அடுப்பில் வைத்த வெண்ணையை தாழியோடு உறிஞ்சி பாத்திரத்தையும் உடைத்திட்டு இவ்வருகே வந்து நின்றான்; முன்பு விரோதியான மதுவினை அழித்தவன், இப்போது தானே விரோதியாக நின்று எங்களை வாழ்ந்திருக்கவிட வில்லை; அண்டையில் குடி இருப்பவரான எங்களை உன் பிள்ளையை கொண்டு வேண்டி செய்வது நியாயம் தானோ, உன் பிள்ளையான கண்ணனை ‘என் பக்கத்திற்கு வா ‘ என்று அழைத்துக்கொள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை;

‘ யசோதை, ஸ்ரீமானான (திருவுடைப்பிள்ளை ) உன் மகன் வீட்டில் வயிறு வளர்ப்பதற்கு ஒன்றும் இல்லாமல் இப்படி விளையாடுகிறான் என்று சொல்ல மாட்டேன், செல்வச் செருக்கினால் செய்கிறான்.  இவன் சிறிதும் ஆலோசிப்பதில்லை; தடை இல்லாமல் செய்கிறான்; இப்படி செய்வதே தனக்கு புகழ் என்று நினைக்கிறான். இப்படி சொல்வதால் பிறர் சொல்லும் பழிச் சொல்லுக்கு இவன் அஞ்சுவதில்லை; இவன் இப்போது என் வீட்டில் வந்து, உருக்க வைத்திருந்த வெண்ணெயைச் சிறிதும் மீதம் இல்லாதபடி சாப்பிட்டு கடைசியில் பாத்திரத்தையும் ஓசை கேட்பதற்காகப் பாறையிலிட்டு உடைத்துப் போட்டு அதை செய்யாதவன் போல அருகில் வந்து நிற்கிறான்; இப்படி உன் வீட்டிற்கு அருகில் வசிக்கிற எங்களுக்குத் துன்பம் வரும்படி உன் பிள்ளையை விடுவது உனக்கு நியாயமோ? ஆகையால் நீ உன் பிள்ளையை அழைத்து வைத்துக்கொள்; இல்லாவிட்டால் நாங்கள் இங்கு குடி வாழ்ந்திட முடியாது’ என்று ஒருத்தி முறையிடுவதாக சொல்லும் பாசுரம்.

Leave a comment