திவ்ய பிரபந்தம்

Home

2.9.2 வருக வருக வருக இங்கே

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே, * கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே, * அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசலகத்தார், * பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே.

பெரியாழ்வார் திருமொழி 2.9.2

வாமன நம்பியே, அடியவர்களுக்கு ரக்ஷணம் கொடுக்கும் குண பூர்ணன் ஆனவனே, அவ்விடத்தைவிட்டு இங்கே விரைந்து ஓடி வா; கறுத்த திருக்குழலையும் சிவந்த திருப்பவளத்தையும் திருமுக மண்டலத்தையும் உடையவனாய், குணபூர்ணன் ஆனவனே, காகுஸ்த்த சக்ரவர்த்தியின் வம்சத்தை விளங்கச் செய்பவனே, இங்கே வந்து அருளுவாய்; (‘உன் மகனை புகழ்ந்து அழைக்கிறாய் அல்லது அச்சமுறும் படி, கடிந்து பேசுகிறதில்லையே,’ என்று என்னை சொல்லும்) நங்காய், ‘இப்பிள்ளை தாயான எனக்கு இப்போது கைக்கு எட்ட முடியாதவன்’, (என்று சொல்லி, பிள்ளையைக் குறித்து), மை போன்ற திரு நிறத்தை உடையவனே, அயல் வீட்டு பெண்கள் கள்ளன், தீம்பன் என்று உன்னை பரிகசித்து பேச நான் தரித்திருக்க மாட்டேன்; உன்மேல் ஊரார் தூற்றி பேசுவதை கேட்கும்படியான பாவத்தை பண்ணின என் மனக்கவலை தீரும்படி இங்கே வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அஞ்ச உரப்பாள் அசோதை (நாச்சியார் திருமொழி, 3.9) என்பது போல, யசோதை பிராட்டி ‘அவனை அதட்டி ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா’ என்று இவர்கள் கேட்கிறார்கள் என்கிறார்.

யசோதை, வாமன நம்பி வருக, கருமையான கூந்தல் மற்றும் சிவந்த வாய் உடைய தாய் தந்தை சொல்லை கேட்கும் இராமபிரானே வருக, நீ அருமையானவன், மற்றவர்கள் உன்னை குறை சொன்னால் அதை கேட்கும் சக்தி எனக்கு இல்லை, ஆகவே இங்கே உடனே வருக வருக என்கிறார். இப்படி இவனை புகழ்ந்து அழைக்கிறாயே, நீ நியமித்து ஒரு வார்த்தை கூற வேண்டாமா என்று இன்னொரு தோழி கூறும் போது, இவன் அரியன், ஆகையால் அப்படி கூற மாட்டேன் என்கிறார்.

Leave a comment