வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பு இடையிட்டு அதன் ஓசை கேட்கும், * கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம் உன் மகனைக் காவாய், * புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல, * அண்ணல் அண்ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்.
யசோதை, கண்ணனுக்கு பூ சூட்டி, காப்பிட்டு தன் அருகே படுக்க வைத்து, தானும் உறங்கிய அளவில், பிறகு தானும் தன்னுடைய வீட்டு வேலைகளை செய்தவளாக இருக்க, கண்ணன், மற்ற வீடுகளில் புகுந்து, அங்குள்ள வெண்ணையை விழுங்கி, அந்த பாத்திரங்களை உருட்டி, உடைத்து, காய்ச்சிய பாலை சாய்த்து பருகி, மற்ற பணியாரங்களை சாப்பிட்டு, அந்த வீடுகளில் உள்ள சிறு பெண்களை அழைத்து அவளிடம் இருந்து வளையல்களை வாங்கி, அதனை கொண்டு நாவற்பழம் வாங்கி, இப்படி பல தீங்குகள் செய்கிறான், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வந்து யசோதையிடம் முறையிட்டு கண்ணனை இங்கே அழைத்து கொள்வாய், என்று சொன்ன காரணத்தினால், அவளும், கண்ணனை பலவாறாக ஸ்தோத்திரம் செய்து, அவன் செய்த லீலைகளையும் சேர்த்து சொல்லி அனுபவிக்கும் பதிகம்.
பெரியாழ்வார் திருமொழி 2.9.1
புண்ணில், புளிச் சாற்றினை வார்த்ததால் எரிவது போல ஆற்ற முடியாத தீம்புகளை அகம் தோறும், செய்வதில் நிபுணனாய் தமையானான பலராமனுக்கு விளையாட்டுக்களால் ஒத்திராதவனாய், ஒரு புத்திரனை பெற்றவளாய், பூரணையான யசோதை பிராட்டியே, தாழிகளில் சேமித்து வைத்த வெண்ணையை களவிலே விழுங்கி, வெண்ணை இருந்த பாத்திரத்தை கல்லிலே இட்டு உடைத்து அது உடைகிற போது உண்டாகும் சப்தத்தை கேட்டு கண்ணனான உபகாரகன், கற்ற விஷமத்தனமான வித்தைகளை பொறுத்துக்கொள்ள மற்றும் அறிந்து கொள்ள சக்தி இல்லாமல் இருக்கிறோம்; (எல்லோருடைய களவுகளையும் பொறுக்கலாம், ஆனால் இவனுடைய களவினை பொறுக்க முடியாது என்கிறார்கள்; ஆதலால்) உன் பிள்ளையை நீ காத்துக் கொள் ; தீம்புகள் செய்து திரிகிற உன் பிள்ளையை அழைத்துக் கொள்வாய்; என்று ஊரில் உள்ள பெண்கள் முறையீட்டு சொல்லுகிறார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
புரை புரையாய் என்று சொன்னது வீடு வீடாக என்று அர்த்தம். ‘தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான்‘ (பெரிய திருமொழி 10.7.4) என்று சாதுவாய் திரியும் நம்பி மூத்தபிரானுக்கும் (பலராமன்) தனக்கும், ஒரு சேர்த்தியும் இல்லாதவன் போல இருக்கிறான் என்கிறார்.
ஒரு இடைச்சி யசோதையிடம் உன் மகன் எங்களுடைய வீடுகளுக்கு வந்து, நாங்கள் சேர்த்து வைத்த வெண்ணெயை விழுங்குகின்றான்; வெண்ணெய் இருந்த மணகுடத்தை கற்பாறைகளிலே மோதி உடைத்து “ஓசை நன்றாக இருக்கிறது” என்கிறான், இவன் செய்யும் விளையாட்டுகளை எங்களால் பொறுக்க முடிவதில்லை, புண்ணிலே புளி சாற்றை பிழிந்தால் ஒத்த பொறுக்க முடியாத தீமைகளை ஒவ்வொரு வீட்டிலும் செய்கிறான். ஆகையால், யசோதையே, நீ உன் பிள்ளையைக் கூவி அழைத்து அவன் இப்படி விளையாடாதபடி உன் வீட்டிலே உன் பக்கத்திலேயே வைத்துக்கொள் என்கிறாள். “அண்ணற்கு அண்ணான்” என்பதால், குணத்தினால் ஒவ்வாதவன் என்கிறார். அண்ணல் கண்ணன் என்று பிரித்து ஸ்வாமித்வ சூசகமான கண்களை உடையவன் என்றும் பொருள் கூறுவர்.
Leave a comment