திவ்ய பிரபந்தம்

Home

2.8.9 இருக்கொடு நீர் சங்கில்

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார், * தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள், * திருக்காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய், * உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.8.9

தேஜஸ்ஸை உடைய திருவெள்ளறையிலே நின்று அருளுபவனே, தீம்பில் கை வளர்ந்தவனே, இன்னும் சில நாளைக்கு தாய்மார் வார்த்தையை மேற்கொண்டு நடக்க வேண்டும். (வேதப் புனித இருக்கை, நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை (திருவாய்மொழி 5.2.9) என்கிறபடி, ) புருஷசுக்தம் முதலிய ரிக்குக்களோடே கூட சுத்த ஜலத்தை சங்கிலே கொண்டு விலக்ஷணரான வைதீக பிராமணர்கள் உனக்கு ரக்ஷை இடுவதாக வந்து நின்றார்கள். (அவர்களை கொண்டு நீ ரக்ஷை இட்டு கொள்ள வேண்டும். அது கேளாமல் நீ ) நாற்சந்தியிலே நின்று கர்வத்துடன் நிற்கிறாய்; அப்படி இருக்காதே; தாயான நான் உனக்கு அழகிய ரக்ஷை இடும் பொருட்டு உன் திருமேனியை காட்டத்தக்கதான திருவந்தி காப்பை இப்போது ஒளியை உடைத்தாம்படி ஏற்றுகின்றேன்; அதைக் கண்டு அருளும் படி வாராய்; இது இந்த பாடலின் பொழிப்புரை.

உனக்கு காப்பு இடும்படி வேத விற்பன்னர்கள் சங்குகளில் நீர் எடுத்துக் கொண்டு  புருஷசுக்தம் முதலிய வேதங்களை சொல்ல வந்திருக்கிறார்கள்” என்று யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப் போகவே, மீண்டும் ‘நீ வராவிட்டாலும் தெருவில் செருக்குடன் விளையாடித் திரிதல் கூடாது.  அது கெட்ட தேவதைகள் இருக்கிற நேரம் ஆகும். தாய் சொல்வதை இன்னும் சில காலமாவது கண்ணனை கேட்குமபடி அவனக்கு காப்பிட விளக்கு ஏற்றுகிறேன்; கண்ணன் வர வேண்டும் என்கிறாள். இன்றும் விளக்கேற்றிக் குழந்தைகளுக்கு திருஷ்டி சுழற்றும்போடும் வழக்கம் உள்ளது.

உருக்காட்டும் அந்தி விளக்கு என்றது திருவந்தி காப்பு, உன் திருமேனி அழகை காட்டும் என்கிறார், ஏற்றுவார் ஏற்றி எடுப்பது போல, நிரதசிய போக்கியமான திருமேனி அழகை காண்கை புருஷார்த்தம் ஆகும். திருக்காப்பு நான் உன்னைச் சாத்த, உருக்காட்டும் அந்தி விளக்கு ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் என்று ரசிக்கலாம்.

Leave a comment