திவ்ய பிரபந்தம்

Home

2.8.8 இன்பம் அதனை உயர்த்தாய்

இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய், * கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே, * செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய், * கம்பக் கபாலி காண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.8.8

ஆனந்தத்தை எனக்கு அதிகம் கொடுத்து என்னை அதிசயிக்க வைத்தவனே, தேவர்களுக்கு எந்நாளும் அறிவதற்கு அரியதானவனே, கும்பத்தை உடைய குவலயாபீடம் என்ற யானையை கொன்ற ராஜாவே, கொடூரமான கம்ஸனுடைய மனதில் யமனைப் போல அச்சத்தை விளைவிக்குமவனே, செம்பொன் போல் விரும்பத்தக்க மதிள்களை உடைய திருவெள்ளறையை இருப்பிடமாக உடையவனே, (எல்லோருக்கும் அடங்கி நடக்கும் சக்கரவர்த்தி திருமகனை(இராமனை) போல வளருகை இல்லாமல்), செல்வச் செருக்கோடு, வேண்டியபடி செய்து, வேண்டியபடி உண்டு வளர்கின்ற பிள்ளையானவனே, அவ்விடத்தில் கண்டவர்களுக்கு நடுக்கத்தை தரக்கூடிய கபாலத்தையும் உடைய துர்க்கை சஞ்சரிக்கின்றாள்; (ஆதலால் கெட்ட தேவதைகள் உலாவுகிற அந்தி பொழுதில் அங்கு நில்லாதே); நான் காப்பிடும்படி விரைவாக ஓடி வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

உன் அவதார குண நலங்களால், எனக்கு மேன்மேலும் பேரானந்ததை கொடுக்கும் கண்ணா, வானவர்களுக்கு எந்நாளும் அருமையானவனே, ‘கும்ப மிகு மதயானை‘ (பெரிய திருமொழி 4.1.9) யான குவாலாயபீடம் என்ற யானையை கொன்றவனே, கம்சனின் நெஞ்சினில் யம பயம் கொடுப்பவனே, திருவெள்ளறையில் உறைபவனே, விரைந்து காப்பிட வா என்று அழைக்கும் பாடல்.

தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே‘ (பெருமாள் திருமொழி 7.8) என்பது போல, பேரானந்தத்தின் இறுதியை கண்டவளாய் உள்ள யசோதை என்கிறார்.

Leave a comment