கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த, * பிள்ளையரசே நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை, * உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய், * பள்ளி கொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.8.7
அழகை உடையதான, திருவெள்ளறையிலே நின்று அருளுபவனே, பரம புருஷன் ஆனவனே, வஞ்சகமான சகடத்தையும், யமளார்ஜுனர்களையும், சந்திபந்தங்கள் அற்றுப் போகும்படி உதைத்த பிள்ளைத்தனத்தில் பெருமை உடையவனே, நீ பேய்ச்சியின் முலையை கையால் பிடித்து சுவைத்த பின் உள்ளபடி ஒன்றும் அறியேன்; இக்காலம் கண்வளர்ந்து அருளுகிற சமயம் ஆகிறது; காப்பு இட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண் வளர்ந்து அருள் செய்யும் போது, (உறங்கும் போது) உன்னை நலிய செய்ய வந்த சகடாசுரனையும், தவிழ்ந்து போகும் சமயத்தில் உன்னை நலிவு அடைய செய்ய வந்த யமளார்ஜுனார்களையும் தங்களுடைய ரூபம் கட்டுக்குலைந்து சிதிலமாய் விழும்படி ‘காலார் சகடம் பாய்ந்தான்‘ (பெரிய திருமொழி 8.3.8) என்றும், ‘ஊருகரத்தினோடு முந்திய‘ (பெரியாழ்வார் திருமொழி 1.6.5) என்றும் சொல்கிறபடியே, திருவடிகளாலும் திருத்தொடைகளாலும், திருத்தோள்களாலும் தள்ளிபோட்ட பிள்ளை ஆயிற்றே என்கிறார்.
பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கைகளோ மனிதர்களுக்கு அப்பாற்பட்டது. ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னால் அறிய முடிய போவதில்லை. சகாடாசுரன், யமளார்ஜுனர்கள், பூதனை முதலியவர்களை முடித்த ஒளி வெள்ளத்தில் இருக்கும் திருவெள்ளறையில் நின்றவனே, படுத்து உறங்குகின்ற நேரம், சந்தியா காலம் தாண்டி மாலை வந்து விட்டது; சௌந்தர்யாதிகளால் உனக்கு மேம்பட்டவர் ஒருவரும் இல்லை, உனக்கு ஒரு குறை வாராதபடி காப்பிட வர வேண்டும் என்று அழைக்கும் பாடல்.
Leave a comment