கஞ்சன் கறுக் கொண்டு நின் மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை, * வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு * மஞ்சு தவழ்மணி மாட மதிள் திருவெள்ளறை நின்றாய், * அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.8.6
மேகங்களானவை தவழும்படியாக உயர்த்தி உடையதாய், நவ ரத்தினங்கள் அழுத்தி அமைக்கப்பட்ட மாடங்களையும், மதிள்களையும் உடைய திருவெள்ளறையில் நின்று அருளுபவனே, ‘கம்ஸன் உன் மேல் கோபம் கொண்டு கறுத்த நிறத்தையும், சிவந்த முடியையும் உடைய பூதனையை வஞ்சனையில் உன்னை முடிப்பதற்காக அனுப்பினான்’ என்கிற ஒரு செய்தியை நீ பிறந்த போதே கேட்டு இருக்கிறேன்; (ஆதலால்), நீ அங்கே நிற்க, நான் அஞ்சுகிறேன்; காப்பிட வேண்டும் படியான அழகை உடையவனே, காப்பு இட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கம்ஸன் ஆகாயத்தில் அசரீரி சொன்னதைக் கேட்டது முதல் தேவகியின் ஒவ்வொரு கர்ப்பத்தில் இருந்தும் குழந்தை பிறந்ததும் அவ்வப்போது அழித்து வருகையில் உனது யோக நித்திரையால் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்ற போது, அந்த கன்னி ‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளிந்து வளர்கின்றான், என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன் மேல் கோபம் கொண்டவனாய் உன்னை வஞ்சனையால் அழிப்பதற்குத் தாய் வடிவத்தோடு கறுப்பும் சிவப்பும் கலந்த முடியினை உடைய பேய்மகளாகிய பூதனையை ஏவினான் என்று ஒரு வார்த்தை கேட்டு இருக்கிறேன். (ஆகையால், அவன் உன்னைக் கொல்ல இன்னும் பலரையும் ஏவக் கூடும்; எனக்கு அச்சமாக இருக்கிறது; ஆகவே), நீ அங்கு நிற்க நான் அஞ்சுகிறேன், நீ அங்கிருந்து புறப்பட்டு நான் அந்திக் காப்பிட இங்கு வர வேண்டும் என்று அழைக்கிறார்.
மக்க ளறுவரைக் கல்லிடை மோத (பெரியாழ்வார் திருமொழி 5.3.1), ஏழாவது கர்ப்பம் நழுவ போய் விட்டது என்று விட்டு, எட்டாவது கர்ப்பத்தை ஹிம்சிப்பதற்காக காத்து கொண்டு இருந்தாலும், தாயும் தகப்பனும் ஒழிய அசலார் யாரும் அறியாதபடி, இருளில் வந்து பிறந்து, அந்த இருளிலேயே திருவாய்பாடி சென்றதை துர்க்கையின் வசனங்களால் அறிந்த கம்ஸன் உன விஷயத்தில் சீற்றம் கொண்டு உள்ளான் என்கிறார். நேர் கொடு நேர் சென்றால் உன்னால் அவனை ஜெயிக்க முடியாது, என்று வஞ்சனையினால் சென்று சாதிப்பாய் என்று இந்த வார்த்தை தான் கேட்டு வந்த வார்த்தை, அதாவது ஸ்ரீ நந்தகோபர், வாசுதேவரிடம் கேட்டு வந்த வார்த்தை.
Leave a comment