போதமர் செல்வக் கொழுந்து புணர் திருவெள்ளறையானை, * மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம், * வேதப் பயன் கொள்ளவல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை, * பாதப் பயன் கொள்ள வல்ல பத்தருள்ளார் வினை போமே.
பெரியாழ்வார் திருமொழி 2.8.10
பெண்கள் எல்லோரிலும் மேற்பட்டவளான யசோதைப் பிராட்டி செந்தூரப் பூவில் பொருந்தி இருப்பவளாய் ஸ்ரீ என்று பெயரை உடையவளாய், பிரதான மஹிஷியான பெரிய பிராட்டியாரோடு, (அகலகில்லேன் இறையும் என்று, திருவாய்மொழி 6.10.10), நித்யம் சேர்ந்து இருப்பவனாய், திருவெள்ளறையில் நிற்பவனாய், தனக்கு புத்திரனாய் நின்ற கண்ணனைக் குறித்து ரக்ஷையிட்ட பாசுரங்களை வேதத்தின் தாத்பர்யத்தை கை கொள்வதில் சமர்த்தரான பெரியாழ்வார் அருளிச் செய்த சொல் மாலையான இத்திரு மொழியில் (பதிகத்தில்) பாட்டுக்கள் தோறும் பின்னடியில் (காப்பிடுகை) சொன்ன பயன் கைக்கொள்ளவல்ல பக்தி யுக்தர்களாய் உள்ளவர்களுடைய மங்களா சாசன விரோதியான பாபம் தன்னடைய விட்டு ஓடிப்போம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கோல் தேடி ஓடும் கொழுந்து போல (இரண்டாம் திருவந்தாதி, 27) போது (பூ) அமர் செல்வக் கொழுந்தான அவள் திருவெள்ளறையில் இருக்கும் இவனுடன் சேராமல் தரிக்க மாட்டாள் என்கிறார். செந்தாமரை கண்ணா என்று சொல்வது போல, திருவெள்ளறையில், தான் பிரதானம் இல்லாமலும், பெரிய பிராட்டியாரே பிரதானமானவராகவும் இருக்கும்படி செய்தவன் ஆயிற்றே.
மாதர்க்கு உயர்ந்த அசோதை என்று சொன்னது, என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள் (பெரிய திருமொழி 2.2.6) என்பது போலவும், திருவிலே ஓன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற் றாளே (பெருமாள் திருமொழி 7.5) என்று சொல்லும்படியும் இவனை பிள்ளையாக பெற்று, இவனின் இளமை கால விளையாட்டுக்களால் சகல ரசங்கலையும் அனுபவிக்க பெற்றவள் ஆனதால், உலகத்தில் உள்ள பெண்களில் தலைமையான பெண் ஆகிறாள்.
ஒரு பாசுரத்தின் ஓரடிக்கே இவ்வளவு மகத்துவம் கூறியதால், இந்த திருமொழியின் பயன் அளவிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு பாட்டின் கடைசி வரியில் கூறியுள்ள காப்பிடலாகிய பலனை பெற்று கொள்வார்கள் என்றும் பக்தர்களுடைய பாவங்கள் தீரும் என்றும் உரைக்கலாம்.
தாமரைப் பூவைப் பிறப்பிடமாகப் பொருந்திய, (பங்கயச் செல்வி என்று இவளுக்கு திருநாமம்), செல்வத்திற்கு உரியவளாய் மற்றை தேவியர்களில் சிறந்தவளான பிராட்டி திருவெள்ளறையில் நின்று அருளியவனைப் பற்றி விட்டுசித்தன் சொன்ன பாமாலையின் பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.
Leave a comment