பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார், * எல்லாம் உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீ இங்கே வாராய், * நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி, * சொல்லார வாழ்த்தி நின்று ஏத்திச் சொப்படக் காப்பிட வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.8.5
சாதுக்கள் வாழ்கின்ற திருவெள்ளறையிலே நின்று அருளுபவனே, ஞானமாகிற பிரபையை உடையவனே, எனக்கு உதவுபவனே, இந்த ஊரில், தீம்புகள் செய்யும் பிள்ளைகள் அநேக ஆயிரம் பேர் உள்ளார்கள்; அவர்கள் செய்யும் எல்லா தீமைகள் எல்லாம், உன் மேல் ஏறுகிறதே தவிர வேறு எங்கும் போகாது; (ஆதலால்), நீ அவர்களோடு சேராமல், இங்கே வா; உன் திருமேனியை சொற்கள் நிறையும்படி நின்று ஸ்துதித்து மங்களா சாசனம் செய்து நன்றாக காப்பு இட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி உன் மேல் அன்புள்ளவர்கள் இருக்கின்ற இவ்விடத்திற்கு வர வேண்டும் என்று அழைக்கிறார். எம்பெருமானுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபம், தானே பிரகாசமாய் (ஸ்வயம்ப்ரகாசமாய்) ஞான மயமாக இருப்பதால், ‘ஞானச்சுடரே’ என்று அழைக்கிறார். நல்லவர்கள் வாழ்கின்ற திருவெள்ளறையில் நின்றவனே வா என்று பாடுகிறார்.
கவிக்கு நிறைபொருளாய் நின்றானை (நான்முகன் திருவந்தாதி, 69) என்று இருக்கும் எம்பெருமானிடம், சொற்கள் நிறையும்படி நின்று வாழ்த்துவது என்பதை சொல்லார வாழ்த்தி என்பதால் தெரிவிக்கிறார்.
Leave a comment