திவ்ய பிரபந்தம்

Home

2.8.4 கண்ணில் மணல் கொடு தூவி

கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை என்னென்று * எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப் படுகின்றார், * கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய், * வண்ணமே வேலை அது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.8.4

கண்ணனே, திருவெள்ளறையில் நின்றாய், கண்டவரோடு எல்லாம் தீம்புகள் செய்பவனே, நிறத்தால் கடலை ஒத்தவனே, (கடல் போன்ற நிறத்தை உடையவனே), வள்ளலே, கணக்கிட முடியாத (உன்னால் ஈடுபட்ட) பெண்பிள்ளைகளான இவர்கள், என் முன்னே வந்து ‘எங்கள் கண்களில் மணலை கொண்டு தூவி, காலால் உதைத்தாய்’ என்று தனித் தனியே உன்னை குறித்து சொல்லி முறை இடுகின்றனர்; (ஆதலால் இனி நீ அவர்களிடம் போகாமல்), காப்பு இட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நாங்கள் கண்ணை விழித்து விளையாட முடியாதபடி இந்த கண்ணன் எங்கள் கண்களில் மண்ணைத் தூவியும், அதை ஏன் என்று கேட்டால் காலினால் உதைத்தும் போனான், என்று இவ்வூரிலுள்ள பல பிள்ளைகள் என்னிடத்தில் முறையிடுகிறார்கள் என்கிறாள்;

நீ செய்தவற்றை பொறுக்கும் உன்னிடம் அன்பு கொண்டவர்களிடத்தில் மட்டும் இல்லாமல், எல்லோரிடத்திலும் தீமை செய்கிறாயே, நீ இப்படி தீமைகள் செய்தாலும் உன்னை விட முடியாதபடி இருக்கிறது உனது வடிவழகு என்று சொல்லி, திருவெள்ளறையில் நின்ற கண்ணனே என்று பாடுகிறார்.

Leave a comment