திவ்ய பிரபந்தம்

Home

2.8.3 செப்போது மென்முலையார்கள்

செப்போது மென்முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு, * அப்போது நானுரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய், * முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய், * இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.8.3

காலை, உச்சி, மாலை என்ற மூன்று காலங்களிலும், தேவர்களால் துதிக்கப்படுபவனே, உன் சீர்மையை எப்போதும் நினத்து பாடுகின்றவர்கள் வசிக்கின்ற திருவெள்ளறையில் நின்று அருளுபவனே, எனக்கு உதவிகள் செய்கின்றவனே, என்னை ஆளப் பிறந்தவனே, பொற்கிண்ணம் என்று சொல்லத்தக்க நிலைமையை உடைத்தாய்; மிருதுவாக இருந்துள்ள முலை உடையவர்களுடைய விளையாட்டுக்காக மணல் கொழித்து சமைத்த சிறு சோற்றையும் மணல் கொட்டகத்தையும், விளையாட்டாக அழித்து போட்டு, (அது மட்டும் இல்லாமல்), அவற்றை அழித்த அந்த காலத்தில், நான் உன்னை சீறி, ‘பெண்களோடு கைப்பிணக்கிட்டு விளையாடி திரிய வேண்டாம்’ என்று உனக்கு நல்லதை செய்யும் வார்த்தைகள் சொல்ல, அதனால் நீ அஞ்சி ஓடிப்போய், அடிசிலையும் (இனிதான சோறு) அமுது செய்ததில்லை; ஆகிலும் இப்போது நான் உன்னை, பிடித்தல், அடித்தல் என்று ஒன்றும் செய்வது இல்லை; நீ காப்பிட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இவளை ஆள்வது ஆவது, கோல் கீழ் கன்றாய் நடப்பது, அதாவது, இவள் சொல்லை கேட்பது, இவள் கொடுத்தவற்றை ஏற்றுக்கொள்வது முதலியவை.

Leave a comment