திவ்ய பிரபந்தம்

Home

2.8.2 கன்றுகள் இல்லம் புகுந்து

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம், * நின்றொழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்; * மன்றில் நில்லேல் அந்திப் போது மதிள் திரு வெள்ளறை நின்றாய், * நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.8.2

பசுக்கள் எல்லாம், கன்றுகள் நிற்கிற இடத்திலே, வந்து புகுந்து, கன்றுகளைக் குடிக்க விடுதல், கரத்தல் ஒன்றும் செய்யாமை கொண்டு, முலைக் கடுப்பாலே கதறுகின்றன. உன்னை நான் அழைத்து வந்து விட்டேன்; (நான் உன்னை அழைத்ததினால் கன்றுகளை குடிக்க விடுவார் ஒருவரும் இல்லாமையால் பசுக்கள் கதறுகின்றன என்பது கருத்து. இப்போது இது சொல்வதாவது, சடக் என்று காப்பிட வர வேண்டும் என்பதற்காக ஆகும்.) என்பக்கம் அல்ப ஸ்னேகமும் இல்லாதவனே, மாலை பொழுதில் (கெட்ட தேவதைகள் நிற்கும்) நாற் சந்தியிலே நீ நில்லாதே. மதிளை உடைய திருவெள்ளறையிலே நின்று அருளுபவனே, தாயான என்னுடைய சொல்லானது உனக்கு பிரியமாக இருக்கும். (ஆகையால்) நீ காப்பிட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கன்றுகள் தொழுவத்தில் நின்று முலை உண்ணப் பெறாமையால் கதறுகின்றன. தாயர்வாய்ச்சொல் தருமம்கண்டாய் (பெரியாழ்வார் திருமொழி 2.2.5) என்ற வார்த்தைகளையும் நினைவில் கொள்ளலாம். மங்களாசாசனர்களுக்கு அரணாகவும், உனக்கு அரணாகவும் உயர்ந்த மதில்களை உடைய திருவெள்ளறை என்கிறார்.

Leave a comment