இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம், * மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார், * சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய், * அந்தியம் போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய்.
கண்ணனுக்கு திருமஞ்சனமாட்டி, குழல் வாரி, மலர்கள் சூடி அழகு பார்த்த யசோதை பிராட்டி, கண்ணனுக்கு திருவந்தி காப்பு இட்டு, அவன் அழகுக்கு திருஷ்டி தோஷம் படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து, அழைப்பது இந்த பதிகம். சாயங்காலத்தில் பல தேவதைகள் கண்ணனை தரிசிக்க காத்து இருக்கின்றன என்றும் உக்கிர தேவதைகள் உலாவும் நேரத்தில் அங்கு இருக்க வேண்டாம் என்று சொல்லி பாடுகிறார். அவன் உகந்து அருளின தேசமான, திருவெள்ளறை எம்பெருமான் நிற்கிற நிலையையும் சேர்த்து யசோதை பிராட்டியின் ஸ்னேகத்தையும் பரிவையும் உடையவராக அவள் பேசியதைப் போல அவனுக்கு திருவந்தி காப்பு இடுவதை இந்த பதிகத்தில் ஆழ்வார் அனுபவிக்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 2.8.1
(திருவெள்ளரையில் மாளிகைகள்) சந்திரன் அளவுக்கு உயர்ந்து இருப்பதால், அவன் வந்து சேரும் படி இருப்பதாய், மங்களாசாசன சமர்த்தர்கள் வசிக்கின்ற திருவெள்ளறையிலே நின்று அருளுபவனே, தேவேந்தரன், சதுர்முக பிரம்மா, ருத்திரன், மற்றுமுள்ள தேவதைகள் எல்லோரும், புருஷசுக்தம் மந்திரங்களால் மந்திரிக்கப்பட்ட சிறந்த கல்பகாதி புஷ்பங்களை கையில் கொண்டு அயலார் கண்ணுக்கு புலப்படாதபடி வெகு தூரம் என்றோ வெகு அருகாமை என்றோ சொல்லமுடியாதபடி வந்து நின்றார்கள். (கண் எச்சில் வாராமைக்காக எப்போதும் காப்பிட வேண்டும் படியான) அழகை உடையவனே, இந்த சமயமானது சாயம் சந்தியா காலம் ஆகும். (ஆகையால் விளையாட்டு ஸ்வாரசியத்தில் இதனை நீ அறிந்திலை. அதே போல உன் அழகினையும் நீ அறிகிறாய் இல்லை.) உன் அழகுக்குத் திருவந்திக் காப்பு இடும்படி நீ வந்து அருளாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்திரன், பிரம்மா, சிவன் மட்டுமன்றி அவர்களின் குடிமக்களுக்கும் சேர்ந்து வந்து இருப்பது சொல்லப்பட்டது. கண்ணன் விஷயத்தில், அதிக காரியங்கள் செய்ததால் இந்திரன் பெயர் முதலில் சொல்லப்பட்டது என்கிறார். இவர்கள் தொட்டில் பருவம் முதலே இவன் விஷயத்தில் கைங்கர்யம் செய்வது தெரிந்ததே. எழிலுடை கிண்கிணி தந்துவனாய் (பெரியாழ்வார் திருமொழி 1.4.3) நின்ற இந்திரன், ஆனி பொன்னால் செய்த வண்ண சிறுதொட்டில் வர விட்ட பிரம்மாவும் (1.4.1) உடையார் கன மணி வரவிட்ட சிவன் (1.4.2) மற்றும், வலம்புரி, சேவடி கிண்கிணி முதலானவை வரவிட்ட மற்ற தேவர்கள், சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும், அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும், அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார், (1.4.4) என்று சொன்னதை நினைவில் கொள்ளலாம்.
‘கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்றிவர்க்கும்’, (திருவாய்மொழி 7.7.11) என்றபடி யார் கண்ணுக்கும் தெரியாதபடி வந்தார்கள் என்கிறார்.
எல்லா தேவர்களும் உன்னை ஸேவிக்கும் படி மந்த்ரபுஷ்பம் கொண்டு வந்து மறைந்து நிற்கிறார்கள், வேத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு பகவானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக் கையில் ஏந்தியுள்ள மலர் மந்திரமலர் என்று கூறபட்டது.
Leave a comment