அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய், * தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா, * உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில் கொண்டாய், * கண்டு நான் உன்னை உகக்கக் கரு முகைப் பூச் சூட்ட வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.7.9
ஸ்ரீ வைகுந்தத்தில் அரசிருக்கை மண்டபத்தில், நித்யசூரிகள் சூழ்ந்து சேவித்து இருக்க அவர்கள் நடுவே வீற்று இருப்பவனே, (உன் மேல் அன்புடைய) அடியவர்களுடைய மனதில், (பரமபதத்தில் இருப்பதைவிட அதிகமாக உகந்து) நித்ய வாசம் செய்பவனே, பரிசுத்தமான தாமரை மலரை பிறப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவனே, ஏழு உலகங்களையும் (பிரளயத்தில் அழியாதபடி) திரு வயிற்றில் வைத்து ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளுபவனே, உன்னை நான் பார்த்து ஆனந்திக்கும் படி கருமுகைப் பூவை சூட்ட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘ இறந்தால் தங்கும் ஓர் அண்டமே கண்டு‘ (பெரிய திருமொழி 10.2.10) என்றும், ‘அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோம் ‘ (பெரிய திருமொழி (8.10.10) என்றும் பரமபதத்தை அண்டம் என்று சொல்வது கண்டோம்.
பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செலுத்தி வீற்றிருப்பவனே! அதைக் காட்டிலும் மிக விரும்பி அன்பர்களின் நெஞ்சிலே எழுந்தருளி இருப்பவனே! லக்ஷ்மீ நாதனே! பரமபதத்திலும் ‘அரவிந்த பாவையும் தானும்‘ (பெரியாழ்வார் திருமொழி 5.2.10), என்கிறபடி அடியவர்கள் உள்ளத்திலும் பிராட்டியும் தானும் கூடவே எழுந்து அருளி இருப்பவனே, உலகங்களைப் பிரளயம் கொள்ளாதபடி வயிற்றிலே கொண்டு காப்பவனே! உன்னை நான் கண்டு களிக்குமாறு கருமுகைப்பூச் சூட வர வேண்டும் என்று அழைக்கிறார்.
Leave a comment