சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய், * சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய், * ஆம் ஆறு அறியும் பிரானே, அணி அரங்கத்தே கிடந்தாய், * ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.7.8
மாலிகன் என்ற பெயரை உடையவனாய் அசுரர்களுக்கு தலைவன் என்று பெயர் எடுத்தவனுடன் நட்பு பாராட்ட கூடிய சாமர்த்தியம் உள்ளவனே; அந்த அசுரன் சாக தக்க வழிகளை நீ யோசித்து சக்கராயுதத்தாலே அவன் தலை அறுத்துப் போட்டவனே, மேல் வருவதை அறியவல்ல என்னுடைய பிரானே, அழகு பொருந்திய திருவரங்க மா நகரில் கண் வளர்ந்து அருளுபவனே, உன் மேல் பரிவை உடையவளான என்னுடைய துக்கத்தை நீக்கினவனே, இருவாட்சி பூவை சூட்ட நீ வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மாலிகன் என்று ஒருவன் கண்ணனுக்கு உயிர்த்தோழனாய் இருந்து அவனிடம் இருந்து பலவகை ஆயுதங்களையும் பயின்று வந்தான். அதனால் கர்வம் அடைந்து, சாதாரண மக்களை துன்பப் படுத்தி வந்தான். கண்ணன் தனக்கு நண்பனாக வந்தவனை கொல்லக்கூடாது என்று இருந்தான். அவன், ‘நீ எனக்கு சக்ராயுதம் பற்றி கற்று தரவில்லையே‘ என்று நிர்ப்பந்திக்க, கண்ணன் இதுதான் தக்க சமயம்‘ என்று திருவுள்ளம் கொண்டு சக்ராயுதத்தை மேலே வீச கற்று கொடுக்க, ஆனால் சக்கராயுதம் திரும்பும்போது எப்படி ஏந்திக் கொள்வது என்று சொல்வதற்கு முன் அவன் சுழற்றி வீச, சக்கரம் திரும்புவதற்கு இடம் இல்லாமல் இவன் தலையை அறுத்தது.
சாமாறு அவனை நீ எண்ணி என்று சொன்னது, இவனை இனி அழிய செய்யாவிடில் நாட்டிற்கு நல்லது அன்று என்று எண்ணியது, அவன் சாக தக்க வழிகளை நீ எண்ணியது, அதாவது நண்பனை கொன்றான் என்ற கெட்ட பெயர் உனக்கு வராமல் இருக்க எண்ணியது; அதே சமயம் உன்னாலே முடிந்தான் என்ற பெயர் உனக்கு வரும்படியும் எண்ணியது போன்றவை ஆகும்.
இவ்வரலாறு எந்தப் புராணத்தில் உள்ளது என்று பல பெரியவர்கள் ஆராய்ந்து பார்த்தும் அது பற்றி தகவல் இல்லை. ஆழ்வார் மயர்வற மதிநலம் அருளப் பெற்று, அவருக்கு எம்பெருமான் காட்டிய வரலாறு என்று கொள்ள வேண்டும் என்பர் பெரியோர். பெரியாழ்வார் திருமொழி 5.4.6 (உன்னுடைய விக்ரமம்) வியாக்கியானத்திலே பெரியவாச்சான் பிள்ளையும் இப்படியே அருளிச் செய்து உள்ளார்.
இங்கே கிடந்தால் நல்ல அடியவர்களை அடையலாம் என்று ஸம்ஸாரத்திற்கு ஆபரணமான திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள எம்பெருமானே என்கிறார். நல்லார்கள் வாழும் நளிரரங்கம் (நாச்சியார் திருமொழி 11.5) என்கிறபடி பரிவர்கள் உள்ள தேசத்தில் பள்ளி கொண்டு இருப்பதால், என் துக்கத்தை போக்கியவனே என்கிறார்.
Leave a comment